;
Athirady Tamil News

இந்தியாவின் 15 முதலீட்டார்கள் யாழ் வருகைதரவுள்ளனர் – துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஷ் தெரிவிப்பு

0

யாழ்ப்பாணத்திற்கு 15 முதலீட்டாளர்கள் வருகை தர உள்ளார்கள் என்று யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக முதன்மை நிர்வாக அதிகாரி ராம் மகேஷ் தெரிவித்தார்.

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் யாழ் இந்தியத் துணைத் தூதரகம் இணைந்து நடத்தும் வடமாகாண தொழில்துறை வர்த்தகச் சந்தை நேற்று செவ்வாய்க்கிழமை (03) காலை ஆரம்பமானது .

மூன்று நாட்கள் நடைபெற உள்ள வட மாகாண தொழில்துறை வர்த்தகச் சந்தை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நாடா வெட்டி திறந்து வைத்து உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,

வடக்கு மாகாண தொழிற்துறைத் திணைக்களம் பல்வேறு முயற்சிகளை செய்து உற்பத்தியாளர்களை ஊக்கப்படுத்தி வருகிறது. இதற்கு இந்திய துணை தூதரகம் உதவிகளை செய்து வருகிறது. உற்பத்திகளை சந்தைப்படுத்துகின்ற போது தான் உள்ளூர் உற்பத்தி வளர்ச்சி அடையும்.

அதற்கு இத்தகைய சந்தை வாய்ப்புகள், கண்காட்சிகள் உதவும். இவை மூலம் உற்பத்திகளை அதிகரிக்க செய்வதுடன் உற்பத்திகளை அடுத்த தரத்திற்கு கொண்டு செல்வதற்கு ஊக்கப்படுத்த கூடியதாக இருக்கும்.

இந்திய தூதரகம் பல்வேறு விதமான உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக கல்வி, கலாச்சாரம், வர்த்தகம் மற்றும் தூதரக உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக அடுத்த ஆண்டு 2025 ஆண்டு முதல் வர்த்தக நிகழ்வுகள், தொழில் முயற்சிகளுக்கு உதவிகளை செய்யவுள்ளது.

அந்த வகையில் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பங்குபற்றுவதற்காக சுமார் 15 மேற்பட்ட இந்திய முதலீட்டாளர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார்கள். மேலும் இந்திய துணைத் தூதரகம் ஊடாக இந்திய தொழில்நுட்ப கைத்தொழிலுக்கான கற்கை நெறிகளை பயில்வதற்கான வாய்ப்புகளை வழங்கி வருகிறோம்.

இதனை பயன்படுத்த வேண்டும். இன்னும் பல கற்கை நெறிகளை கற்கமுடியும் ஆர்வமுடையவர்களை பங்குபற்ற ஊக்கப்படுத்த வேண்டும் என்றார் .

இந்த கண்காட்சியில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், மற்றும் வடக்கு மாகாண தொழில்துறை பணிப்பாளர்கள், திணைக்கள அதிகாரிகள், சிறு தொழில் முயற்சியாளர்கள் கலந்து கொண்டார்கள்.

யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றுவரும் இந்த சந்தை நிகழ்வில் மாலை 5.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரை கலாச்சார நிகழ்வுகள் நடைபெற உள்ளதுடன் இந்த சந்தையில் நெசவு உற்பத்திகள், கைப்பணி உற்பத்திகள், உணவு உற்பத்திகள், ஆடை உற்பத்திகள், விவசாய உற்பத்திகள் தொழில் வழிகாட்டல் வியாபார ஆலோசனை உள்ளடங்கலாக 60 கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் காலை 9.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறுவதோடு அனுமதி இலவசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.