ஜேர்மன் இராணுவ ஹெலிகொப்டர் மீது தாக்குதல் நடத்திய புடினின் போர்க்கப்பல்… உருவாகும் புதிய சிக்கல்
பால்டிக் கடலில் ஜேர்மனியின் ராணுவ ஹெலிகொப்டர் மீது ரஷ்ய போர்க்கப்பல் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மிக அவசரமான சூழ்நிலை
குறித்த தகவலை ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சர் உறுதி செய்துள்ளார். வெளியான தகவலின் அடிப்படையில் உளவுப் பணியில் ஈடுபட்டிருந்த ஜேர்மன் ராணுவ ஹெலிகொப்டரை நோக்கி ரஷ்ய போர்க்கப்பல் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவே தெரிய வந்துள்ளது.
இது தாக்குதல் நடவடிக்கையை விட எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, ரஷ்யாவின் இந்த நடவடிக்கையானது நேட்டோ நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மறைமுக அழுத்தம் நேரிடையான மோதலாக வெடிக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளதாக கூறுகின்றனர்.
பால்டிக் கடலில் ரோந்து பணியை அதிகப்படுத்திய நிலையிலேயே ஜேர்மன் ராணுவம் ஹெலிகொப்டரை அனுப்பியுள்ளது. மேலும், மிக அவசரமான சூழ்நிலையில் மட்டுமே எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு முன்னெடுக்கப்படும்.
இதனிடையே, ரஷ்ய போர்க்கப்பல் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான தகவல்களை ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தவில்லை.
ஆனால் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் Annalena Baerbock நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு, இது பிரஸ்ஸல்ஸில் நேட்டோ உறுப்பு நாடுகளின் கூட்டம் நடப்பதால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விளக்கமளிக்கவும் மறுத்துவிட்டார். மட்டுமின்றி, பால்டிக் கடல் பகுதியில் பைப்லைன்கள் மற்றும் டேட்டா கேபிள்களின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்றார்.
குற்றவியல் விசாரணை
கடந்த மாதம் வெறும் 24 மணி நேரத்திற்குள் பின்லாந்து மற்றும் ஜேர்மனியை இணைக்கும் கேபிளும், ஸ்வீடன் மற்றும் லிதுவேனியாவை இணைக்கும் கேபிளும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இது சதிவேலை என்றே அப்போது ஜேர்மனியின் பாதுகாப்பு அமைச்சர் Boris Pistorius குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ஸ்வீடன், ஜேர்மனி மற்றும் லித்துவேனியா ஆகிய நாடுகள் கடந்த வாரம் குற்றவியல் விசாரணைகளை ஆரம்பித்தன.
ரஷ்ய துறைமுகமான Ust-Luga-ல் இருந்து நவம்பர் 15ம் திகதி புறப்பட்ட சீனாவின் மிகப்பெரிய சரக்கு கப்பலான Yi Peng 3 மீதே சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஆனால் சேதமடைந்த கேபிள்களுக்கு ரஷ்யா பொறுப்பேற்கவில்லை.
இதனிடையே, விளாடிமிர் புடினின் பிரபலமான நட்பு நாடுகளான வட கொரியா மற்றும் ஈரான் ஆகியவை hybrid தாக்குதல்கள் மூலம் ஐரோப்பிய நாடுகளை சீர்குலைக்க முயல்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.