;
Athirady Tamil News

யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டி !

0

யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தால் நடத்தப்பட்ட இரண்டாவது யாழ்ப்பாண சர்வதேச சதுரங்க போட்டியானது கார்த்திகை 30 தொடக்கம் மார்கழி 4 ம் திகதிவரை கொக்குவிலில் அமைந்துள்ள செல்வா பலஷில் நடைபெற்று நிறைவு பெற்றது.

இந்த சர்வதேச சதுரங்க போட்டியில் எழுநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் இந்தியா,ஐக்கியராச்சியம் மற்றும் இலங்கையின் சகல மாவட்டங்களில் இருந்தும் வயது பால் வேறுபாடற்று கலந்து கொண்டனர்.

இந்தியாவில் இருந்து முதல் தர சதுரங்க வீரர்கள் பதினைந்து பேருக்கும் மேல் இப்போட்டியில் கலந்து கொண்டது இப்போட்டியின் முக்கிய அம்சமாகும்.

பத்து சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் வெற்றி வீரராக சம்பியன் பட்டத்தை இந்தியாவின் நுபைர்ஷா ஷேக் மொஹம்மது வென்றார்.இவருக்கு வெற்றிகேடயம், பதக்கத்தோடு இலங்கை மதிப்பில் இரண்டு லட்சம் ரூபாய் பெறுமதியான காசோலை வழங்கப்பட்டது.

இரண்டாவது இடத்தை பெற்றுக்கொண்ட யாழ் மாவட்ட சதுரங்க வீரர் சிவதனுஜனுக்கு ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் காசோலையும் மூன்றாவது இடத்தை பெற்றுக் கொண்ட இந்தியாவின் பிரஜ்வால் பிஷெட் க்கு ரூபாய் ஒரு இலட்சம் காசோலையும் வழங்கப்பட்டது.

பெண்கள் பிரிவில் இலங்கையை சேர்ந்த ஐனந்தினி அபயசிங்க சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இத்தோடு போட்டியில் வெவ்வேறு பிரிவுகளில் வென்ற வீரர்களுக்கும் பண பரிசுகள் , பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவிக்கப்பட்டது.

நிறைவு நாளில் பிரதம விருந்தினராக யாழ் பல்கலைகழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா அவர்களும் சிறப்பு விருந்தினராக இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் தலைமை அதிகாரி ராம் மகேஷ் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இந்த சர்வதேச சதுரங்க போட்டியின் பிரதான அனுசரணையாளராக லைக்கா ஞானம் பவுண்டேஷனும் அத்தோடு உள்நாட்டு ,வெளிநாட்டு நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புமே இவ்வாறான மிக சிறந்த போட்டி ஒன்றை யாழ் மாவட்டத்தில் இரண்டாவது முறையாகவும் வெற்றி கரமாக நடாத்தி முடிக்க முக்கிய காரணமாக அமைந்தமை குறிப்பிட தக்கது.
சர்வதேச மற்றும் தேசிய அளவில் சிறந்த சதுரங்க வீரர்களை இந்த போட்டியின் மூலம் எமது உள்ளூர் சதுரங்க விளையாட்டில் ஆர்வமுள்ள வீரர்களுடன் சேர்த்து விளையாட செய்வதும் அதனூடாக எமது சதுரங்க வீரர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து ஊக்குவிப்பதுடன் அவர்களை தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் சிறந்த வீரர்களாக மாற்றுவதோடு பாடசாலை மட்டத்தில் இருந்து சதுரங்கத்தை சிறு குழந்தைகள் முதல் ஊக்கபடுத்துவதும் யாழ் மாவட்ட சதுரங்க சம்மேளனத்தின் பிரதான நோக்கங்களாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.