ஃபெஞ்சல் வெள்ள பாதிப்பு.. தமிழக அரசு வழங்கும் ரூ.2,000 -டோக்கன் பற்றி முக்கிய தகவல்!
வெள்ள நிவாரணத்திற்கான டோக்கன் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஃபெஞ்சல் புயல்
வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்தது. புயல் கரையை கடந்தாலும் கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பேரிடர் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஃபெஞ்சல் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதனையடுத்து, ஃபென்ஜால் புயல் மற்றும் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 நிவாரண நிதியாக வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதேபோல அது போல் வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழந்திருந்தால் தலா ரூ 4 ஆயிரமும், கோழி இறந்திருந்தால் தலா ரூ 100 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.மேலும் எருது, பசு இறந்திருந்தால் ரூ 37,500 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய தகவல்
வெள்ளம் பாதித்த பகுதிகளில் முழு வீச்சில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வெள்ள நிவாரணம் ரூ.2,000 வழங்குவதற்கான டோக்கன் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன. வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன்கார்டுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
அதற்கான கணக்கீட்டு பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் தயாரித்துள்ளார்கள். இன்று முதல் வெள்ள நிவாரணத்திற்கான டோக்கன் விநியோகிக்கப்படும். டோக்கன் விநியோகிக்கப்பட்டு இரண்டு முதல் மூன்று நாட்களில் அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்கப்படும்” என்றார்.