முன்னேறும் கிளர்ச்சியாளர்கள்… ஏவுகணை, ட்ரோன்கள், இராணுவ ஆலோசகர்களை அனுப்பும் ஈரான்
சிரியாவில் ஆசாத் அரசுக்கு ஆதரவாக ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் அதன் ராணுவ ஆலோசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஈரான் இலக்கு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மிக முக்கிய நட்பு நாடாக
மூத்த ஈரானிய அதிகாரி இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார். சிரியாவில் தங்களது இராணுவ ஆலோசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் படைகளை நிலைநிறுத்தவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஈரான் எடுத்துள்ளது என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதிக்கத்தை தடுக்கும் வகையில் ஈரானுக்கு மிக முக்கிய நட்பு நாடாக சிரியா உள்ளது. இந்த நிலையில், கிளர்ச்சியாளர்களின் நகர்வுகளை கண்காணிக்க, சிரியாவிற்கு உளவுத்துறை மற்றும் செயற்கைக்கோள் ஆதரவை ஈரான் வழங்கி வருகிறது.
13 ஆண்டுகளுக்கு முன்னர் சிரியாவில் வெடித்த உள்நாட்டுக் கலவரத்தை அடுத்து தற்போது ஆசாத் அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் திடீரென்று முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இது ஆசாத் அரசுக்கு கடும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. ஈரான் மட்டுமின்றி ரஷ்யாவும் ஆசாத் அரசுக்கு இராணுவ உதவிகளும் பொருளாதார ஆதரவும் அளித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது கிளர்ச்சியாளர்கள் முக்கிய நகரங்களை நோக்கி முன்னேறுவதைத் தடுப்பதில் ஈரானும் சிரியாவும் ஒன்றுபட்டுள்ளன. ஈரான் இராணுவம் சிரியாவில் களமிறங்கும் சூழல் உருவாகவில்லை என்பதையும் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிவிவகார அமைச்சர்கள்
மேலும், சிரியாவும் ரஷ்யாவும் உக்கிரத் தாக்குதலை முன்னெடுக்க வேண்டும் என்பது மட்டும் தற்போது முடிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஆசாத்தின் படைகளுக்கு இராணுவ ஆதரவை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஈரான் எடுத்துள்ளது என்றார்.
இதனிடையே, சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் முன்னேற்றம் குறித்து விவாதிக்க துருக்கி, ஈரான் மற்றும் ரஷ்யாவின் வெளிவிவகார அமைச்சர்கள் தோஹாவில் சனிக்கிழமை கூடுகின்றனர். நேட்டோ உறுப்பு நாடான துருக்கி ஆசாத் அரசாங்கத்திற்கு அரசியல் ஆதரவை அளித்து வருகிறது.
மேலும், ஈரானின் நட்பு நாடுகள் மீண்டும் வலிமை பெறுவதைத் தடுக்க இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதாக ஈரான் நம்புகிறது.