சிரியாவின் மற்றும் ஒரு முக்கிய நகரைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்கள்!
ஜனாதிபதி பஷர் அல்-அசாத்துக்கு எதிரான 2011 ஆம் ஆண்டு கிளர்ச்சியின் ஆரம்ப இடமான, தாராவின் தெற்கு நகரத்தை நேற்று (07.12.2024) கைப்பற்றியுள்ளதாக சிரிய (Syria) கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
100 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள தலைநகர் டமாஸ்கஸுக்குப் பாதுகாப்பாகச் செல்லும் ஒப்பந்தத்தின் கீழ், தாராவிலிருந்து, அரச படைகளை திரும்பப் பெறுவதற்கு, இராணுவம் ஒப்புக்கொண்டதாக கிளர்ச்சியாளர் தரப்புகள் தெரிவித்துள்ளன.
சிரியாவின் முக்கிய நகரங்களான டமாஸ்கஸ் உள்ளிட்டவை சிரிய அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், கடந்த 10 நாட்களில் மேற்கொண்ட தாக்குதல்களினால் மூன்றாவது பெரிய நகரமான டமாஸை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.
கிளர்ச்சியாளர்கள்
இந்நிலையில் இன்று தாராவின் தெற்கு நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர். இந்தநிலையில், தமது படைகள் ஹோம்ஸ் நகரை கைப்பற்ற முன்னேறி வருவதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், ஹோம்ஸ் கைப்பற்றப்பட்டால், தலைநகர் டமாஸ்கஸும், ரஷ்ய கடற்படைத் தளம் மற்றும் விமானத் தளமும் என்பனவற்றின் தொடர்புகள் துண்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தாக்குதலுக்கு தலைமை தாங்கும் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) என்ற இஸ்லாமியக் குழுவை உள்ளடக்கிய கிளர்ச்சிப் பிரிவுகளின் கூட்டணி, ஹோம்ஸில் உள்ள அசாத்தின் அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கும் படைகளை விலகிச் செல்லுமாறு கடைசி எச்சரிக்கையை விடுத்துள்ளது.