மீண்டும் திறக்கப்பட்ட Notre Dame பேராலயம்… ட்ரம்ப், ஜெலென்ஸ்கி பங்கேற்பு
பெரும் தீ விபத்தில் சிக்கி சேதமடைந்திருந்த Notre Dame பேராலயம் நீண்ட 5 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
40 நாடுகளின் தலைவர்கள்
சனிக்கிழமையன்று பாரிஸ் பேராயர் Notre Dame பேராலயத்தை திறந்து வைப்பதன் அடையாளமாக கதவுகளைத் தட்டி உள்ளே நுழைந்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள டொனால்டு ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, பிரித்தானியா இளவரசர் வில்லியம் என நூற்றுக்கணக்கான சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
சுமார் 750 மில்லியன் டொலர்( இந்திய மதிப்பில் ரூ 6,350 கோடி) செலவிடப்பட்டு 5 ஆண்டுகளில் மறு சீரமைப்பு முடிக்கப்பட்டு தற்போது வெகுவிமரிசையாக திறந்துள்ளனர். இந்த விழாவிற்கு டொனால்டு ட்ரம்ப் உட்பட 40 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
அத்துடன் பிரித்தானிய இளவரசர் வில்லியம், டெஸ்லா உரிமையாளர் எலோன் மஸ்க் உட்பட சிறப்பு விருந்தினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். விழாவிற்கு சற்று முன்பு ஜனாதிபதி மாளிகையில் ஜெலென்ஸ்கி மற்றும் டிரம்ப் ஆகியோருடன் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் மும்முனை பேச்சு வார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இது உக்ரைனுக்கான அமெரிக்க ஆயுத உதவியை உறுதிப்படுத்தும் நடவடிக்கை என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஜனவரி மாதம் பதவியேற்றதும் ஏறக்குறைய மூன்று ஆண்டுகால உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என்று டொனால்டு ட்ரம்ப் சபதம் செய்துள்ளார்.
மின் கசிவு போன்ற விபத்து
இதனால், இதுவரை ரஷ்யா கைப்பற்றியுள்ள பிராந்தியங்களை விட்டுக்கொடுத்து போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள உக்ரைனை கட்டாயப்படுத்துவார் என்ற அச்சம் ஜெலென்ஸ்கி மற்றும் அவரது ஆதரவு நாடுகளிடையே எழுந்துள்ளது.
இப்படியான ஒப்பந்தம் சாத்தியமில்லை என தொடக்கத்தில் இருந்தே ஜெலென்ஸ்கி எதிர்த்து வருகிறார். 2019ல் நடந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
ஆனால் மின் கசிவு போன்ற விபத்து தான் பெரும்பாலும் காரணம் என்று நம்புகிறார்கள். இரண்டு நாள் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக Notre Dame பேராலயத்தில் ஞாயிறன்று நடக்கவிருக்கும் ஆராதனையில் 170 கத்தோலிக்க ஆயர்களும் 100 பாரிஸ் நகர பாதிரியார்களும் கலந்துகொள்கின்றனர்.
உள்ளூர் நேரப்படி மாலை 6.30 மணிக்கு பொதுமக்களுக்கான ஆராதனை முன்னெடுக்கப்படுகிறது.