கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை வெளியிட்ட பிரித்தானிய மன்னர் சார்லஸ்: வெளியான புதிய புகைப்படம்!
புதிய புகைப்படத்துடன் கூடிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை பிரித்தானிய மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா வெளியிட்டுள்ளனர்.
கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை
பக்கிங்ஹாம் அரண்மனை தோட்டத்தில் எடுக்கப்பட்ட புதிய புகைப்படத்துடன் கூடிய கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையை பிரித்தானிய மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா வெளியிட்டுள்ளனர்.
அதில், “உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என்று வாழ்த்து அட்டையில் இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் புகைப்படத்தில், மன்னர் சார்லஸ் சாம்பல் நிற உடை மற்றும் நீல நிற டை அணிந்துள்ளார். ராணி கமிலா, நீல நிற கம்பளி உடையுடன் தனித்துவமான நகைகளை அணிந்துள்ளார்.
கடந்த ஆண்டை விட எளிமை
கடந்த ஆண்டு வெளியான கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டையில், மன்னர் சார்லஸ் இம்பீரியல் ஸ்டேட் கிரீடம், முடிசூட்டு ஆடை மற்றும் எஸ்டேட் அங்கியை அணிந்திருந்தார். ராணி கமிலா, ராணி மேரியின் கிரீடத்தை அணிந்திருந்தார்.
ஆனால் இந்த ஆண்டு வெளியான புகைப்படத்தில், கடந்த ஆண்டை விட மிகவும் தனிப்பட்டதாகவும், இயல்பாகவும் இருப்பதை பார்க்க முடிகிறது.
பிரித்தானிய அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள், ஒவ்வொரு ஆண்டும் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுக்கு பண்டிகை அட்டைகளை அனுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.