தாய் வழங்கிய கிறிஸ்துமஸ் பரிசு! மாதம் ரூ.16 லட்சம் சம்பாதிக்கும் 17 வயது பிரித்தானிய சிறுவன்
கிறிஸ்துமஸ் விழாவுக்கு தாய் வழங்கிய பரிசை பயன்படுத்தி பிரித்தானியாவை சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் ரூ.16 லட்சம் வரை வருமானம் ஈட்டியுள்ளார்.
தாய் வழங்கிய கிறிஸ்துமஸ் பரிசு
இன்றைய இளைஞர்கள் தங்கள் ஆர்வங்களை வணிகமாக மாற்றி, வெற்றி கதைகளை எழுதி வருகின்றனர்.
அப்படி ஒரு கதையைச் சொல்லும் இளைஞர் தான் இங்கிலாந்தைச் சேர்ந்த 17 வயதான கேலன் மெக்டொனால்ட்.
கேலனுக்கு ஸ்டிக்கர்கள் மீது மிகுந்த ஆர்வம் இருந்துள்ளது. இதனை அறிந்து இருந்த அவரது தாயார் கரேன் நியூஷாம் கேலனின் ஆர்வத்தை பூர்த்தி செய்யும் விதமாக கிறிஸ்துமஸ் பரிசாக ஒரு டிஜிட்டல் கைவினை இயந்திரத்தை பரிசளித்துள்ளார்.
இந்த கிறிஸ்துமஸ் பரிசு தான் 17 வயது சிறுவனான கேலனின் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியுள்ளது.
ரூ.16 லட்சம் வரை வருமானம்
கேலன் அந்த டிஜிட்டல் கைவினை இயந்திரத்தை பயன்படுத்தி கண்ணாடி பொருட்களில் ஒட்டக்கூடிய அழகான ஸ்டிக்கர்களை வடிவமைத்து அதை பேஸ்புக்கிலும் பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து அவருடைய ஸ்டிக்கர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார். மேலும் இதன் மூலம் நல்ல வருமானம் ஈட்டத் தொடங்கியுள்ளார்.
தொடர்ந்து, தனது ஸ்டிக்கர் தொழிலை விரிவுபடுத்திய கேலன், பெரிய பிரிண்டர்களை வாங்கி, அதிக அளவில் ஸ்டிக்கர்களை தயாரிக்கத் தொடங்கினார்.
டிக்டாக் மற்றும் பிற வணிக வலைத்தளங்கள் மூலம் தனது ஸ்டிக்கர்களை விற்பனை செய்து, மாதம் சராசரியாக ரூ.16 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார்.
இது தொடர்பாக கேலன் கூறுகையில், “என் தாய் கொடுத்த கிறிஸ்துமஸ் பரிசு தான் எனது வாழ்க்கையை மாற்றியது. விளையாட்டாகத் தொடங்கிய இந்த ஸ்டிக்கர் தொழில் இவ்வளவு பெரிய வெற்றியைத் தரும் என்று நான் நினைத்திருக்கவில்லை” என்கிறார்.