மண்டபம் மற்றும் மணப்பெண்ணை காணவில்லை.., திருமண ஊர்வலம் வந்த மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி
சமூக வலைதளத்தில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய வந்தபோது மண்டபம் மற்றும் மணப்பெண்ணை காணவில்லை.
மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி
இந்திய மாநிலமான பஞ்சாப், ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள மரியலா கிராமத்தைச் சேர்ந்த தீபக் குமார் என்பவர் துபாயில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், பஞ்சாபை சேர்ந்த மன்பிரீத் கவுர் என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் தீபக் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக நேரில் பார்க்காமல் இன்ஸ்டாகிராம் மூலம் மட்டுமே பேசி வந்துள்ளனர்.
இறுதியில், திருமணம் செய்ய முடிவெடுத்து இரு வீட்டாரும் மொபைல் மூலம் மட்டுமே பேசி திருமண முடிவை எடுத்துள்ளனர்.
மணப்பெண்ணின் ஊரான மோகாவில் உள்ள ரோஸ் கார்டன் பேலஸ் மண்டபத்தில் வைத்து டிசம்பர் 6 -ம் திகதி திருமணம் நடப்பதாக இருந்துள்ளது.
இதையடுத்து, தீபக் குமார் தனது குடும்பத்தினர் மற்றும் 150 விருந்தினர்களுடன் ஊர்வலமாக மோகாவிற்கு வந்துள்ளார். அப்போது, ரோஸ் கார்டன் பேலஸ் மண்டபத்திற்கு அழைத்து செல்ல ஆள் அனுப்பியுள்ளதாக பெண் வீட்டார் கூறியுள்ளனர்.
ஆனால், பலமணி நேரம் ஆகியும் அவர்கள் வரவில்லை. பின்னர், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்த போதுதான் ரோஸ் கார்டன் பேலஸ் என்ற ஒன்றே அப்பகுதியில் இல்லை என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து, மணமகள் மன்பிரீத் செல்போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது. பின்னர், மணமகன் வீட்டார் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.
அப்போது, திருமண செலவுக்காக பெண் வீட்டாருக்கு ரூ.60,000 கொடுத்ததாகவும், மணப்பெண்ணை போட்டோவில் மட்டும் தான் பார்த்ததாகவும் தீபக் கூறியுள்ளார். அவர் கொடுத்த புகாரின் படி மணமகள் வீட்டாரை பொலிஸார் தேடி வருகின்றனர்.