உக்ரைன் போரால் S-400 ஏவுகணை விநியோகிக்க தாமதம்.., ரஷ்யாவிடம் கேள்வி கேட்க இந்தியா முடிவு
எஸ் 400 (S-400) ஏவுகணை மற்றும் உதிரிபாகம் விநியோகத்தில் ஏற்படும் தாமதம் குறித்து ரஷ்யாவிடம் கேள்வி எழுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.
ஏவுகணை விநியோகிக்க ஏன் தாமதம்?
கடந்த 2018 -ம் ஆண்டில் ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்க இந்தியாவும் ரஷ்யாவும் ரூ.40,000 கோடி மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்த எஸ் -400 ஏவுகணையானது எதிரிகளின் போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை 380 கி.மீ தொலைவில் இடைமறித்து அழிக்கும் திறன் கொண்டவையாகும். இதுவரை இந்தியாவுக்கு 3 எஸ்-400 ஏவுகணை படைப்பிரிவுகளை ரஷ்யா கொடுத்துள்ளது.
தற்போது உக்ரைன் போரில் ரஷ்யா அதிக கவனம் செலுத்தி வருவதால், உக்ரைன் போருக்கு தேவையான ஆயுதங்களை ராணுவத் தளவாட நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன.
இதனால், இந்தியாவிற்கு விநியோகம் செய்யப்பட வேண்டியிருந்த எஸ் 400 (S-400) ஏவுகணை விநியோகிக்க 2026-ம் ஆண்டு வரை தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வந்துள்ளது.
அதேபோல கடந்த 2019-ம் ஆண்டில் எஸ்எஸ்என் ரக அணுசக்தி நீர்மூழ்கி நீர்மூழ்கி கப்பலை 10 ஆண்டு காலம் குத்தகைக்கு எடுக்க இந்தியா ஒப்பந்தம் செய்தது.
தற்போது, இதன் விநியோகமும் 2028-ம் ஆண்டு வரை தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது. இதனை தவிர சுகோய் போர் விமானங்கள், டி-90 டேங்க்குகளின் உதரிபாகங்கள் விநியோகத்தையும் ரஷ்யா தாமதித்து வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவில் நடைபெறும் ஐஎன்எஸ் துஷில் ஏவுகணை போர்க்கப்பலை இந்திய கடற்படையில் சேர்க்கும் நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.
இதையடுத்து, இன்று மாஸ்கோவில் நடைபெறும் இந்தியா மற்றும் ரஷ்யா இடைய ராணுவ ஒத்துழைப்பு கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.
இந்த கூட்டத்தில் அவர், ராணுவத் தளவாடங்களை விநியோகிக்க தாமதம் ஏற்படுவது குறித்து ரஷ்யாவிடம் கேள்வி எழுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.