அசாத்திற்கு தனிப்பட்ட முறையில் தஞ்சமளித்த புடின்: கிரெம்ளின் கூறிய தகவல்
தப்பியோடிய சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனிப்பட்ட முறையில் தஞ்சமளித்ததாக கிரெம்ளின் கூறியுள்ளது.
அசாத் தஞ்சம்
சிரியாவை விட்டு தப்பியோடிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு ரஷ்யா தஞ்சமளித்ததாக தகவல் பரவியது.
அவர் தனது குடும்பத்துடன் அங்கே தஞ்சமடைந்ததாக அந்நாட்டு ஊடகம் ஒன்று உறுதி செய்தது.
இந்நிலையில், விளாடிமிர் புடின் தனிப்பட்ட முறையில் அசாத்திற்கு தஞ்சமளித்ததாக கிரெம்ளின் தெரிவித்துள்ளது.
இது அவரது முடிவு
புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதுதொடர்பாக கூறுகையில், “அரசு தலைவர் இல்லாமல் இதுபோன்ற முடிவுகளை எடுக்க முடியாது. இது அவரது முடிவு. ஜனாதிபதி அசாத் இருக்கும் இடத்தைப் பொறுத்தவரை, நான் உங்களிடம் எதுவும் கூற முடியாது. என்ன நடந்தது [ஆட்சிக் கவிழ்ப்பு] என்பது உலகம் முழுவதையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது, இந்த விடயத்தில் நாங்கள் விதிவிலக்கல்ல” என தெரிவித்துள்ளார்.
மேலும் புடின் அவரை சந்திக்க திட்டமிடப்படவில்லை என்றும் பெஸ்கோவ் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், திங்கட்கிழமை பிற்பகல் சிரியா தொடர்பான ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்த ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளது.