மகிந்தவின் நெருங்கிய உறவினர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பு
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கி உறவினருமான உதயங்க வீரதுங்கவுக்கு அமெரிக்கா தடைகள் மற்றும் வீசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அத்துடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவுக்கும் அமெரிக்காவினால் இந்த தடை விதிக்கப்படடுள்ளது.
எயார்பஸ் விமான கொள்வனவு
எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதற்காக கபில சந்திரசேன இலஞ்சம் பெற்றதாகவும், இலங்கை விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்யும் திட்டத்திற்கு உதயங்க வீரதுங்க ஊழல் மோசடியில் ஈடுபட்டதாகவும் அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் பிரிவு 7031(c)ன் கீழ், அவர்கள் இருவரின் பெயர்கள் மற்றும் அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு, அவர்கள் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
“ஸ்ரீலங்கா எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, பிரிவு 7031(c)இன் கீழ் கணிசமான ஊழலில் ஈடுபட்டவர் என வெளிவிவகார திணைக்களம் பகிரங்கமாக குறிப்பிடுகிறது.
சந்திரசேன ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இருந்த போது, இலங்கை சந்தை பெறுமதிக்கு மேல் எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு இலஞ்சம் பெற்றார்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் பெயரிடப்பட்டனர்.” என அமெரிக்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.