பருத்தித்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி மாத நிகழ்வும், வாசிப்பு மாத நிகழ்வும் பண்பாட்டு பெருவிழாவும்
வடக்கு மாகாணத்தை அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்ற வேண்டும். அதற்கு முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் எமது உள்ளூராட்சி மன்றங்களும் மாற்றமடையவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.
பருத்தித்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் உள்ளூராட்சி மாத நிகழ்வும், வாசிப்பு மாத நிகழ்வும் பண்பாட்டு பெருவிழாவும் பருத்தித்துறை எஸ்.எஸ். மண்டபத்தில் இன்று புதன்கிழமை (11.12.2024) இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.
‘தமிழர்களுக்கு என்று தனிச் சிறப்பான பண்பாடுகள் இருக்கின்றன. அவை இன்று அருகி வருகின்றன. அவற்றை கட்டிக்காப்பதற்காகவே இவ்வாறான பண்பாட்டு விழாக்கள் நடத்தப்படுகின்றன. அவை வரவேற்றகப்படவேண்டும். ஊக்குவிக்கப்பட வேண்டும். இதன் ஊடாக எமது பண்பாடுகள் காக்கப்படுவதையும் உறுதிப்படுத்தவேண்டும். குறிப்பாக வரவேற்பு, விருந்தோம்பல், நன்றி கூறல் என்பன எமது பண்பாட்டின் அடிப்படைகள். அவற்றை விட்டு நாம் இன்று வெகுதூரம் சென்றுவிட்டோமா என்ற அச்சம் ஏற்படுகின்றது.
அரச திணைக்களங்களை நாடி சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்கள் சென்றால், சில திணைக்களங்களில் அவர்களை வரவேற்பதற்கு யாருமில்லை. அது தவறானது. பொதுமக்களை நாடிச் சென்று நாம் சேவை செய்யவேண்டும். விரைவான, தரமான, அன்பான சேவையே மக்கள் சேவை. அதைச் செய்வதற்கு ஒவ்வொரு திணைக்களங்களும் முன்வரவேண்டும்.
எமது மாகாணத்தின் இளையோர் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை நாம் எமது மாகாணத்தில் உருவாக்கிக் கொடுக்கவேண்டும். அதற்கு முதலீடுகளை இங்கு ஊக்குவிக்கவேண்டும். நான் யாழ். மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலத்தில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு சிலர் வந்தார்கள். ஆனால் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். அவர்களிடம் கேட்டபோது, முதலீடுகளை மேற்கொள்வதற்கு அதிகாரிகள் கையூட்டு எதிர்பார்க்கின்றார்கள் என்று சொன்னார்கள். அது அன்றைய நிலைமை. ஆனால் தற்போதைய அரசாங்கம் அவற்றுக்கு முற்றிலும் எதிரானது. பல முதலீட்டாளர்கள் இங்கு வருவதற்கு விரும்புகின்றார்கள். அவர்களை நாங்கள் வரவேற்கவேண்டும். எமது உள்ளூராட்சிமன்றங்கள் முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் செயற்படவேண்டும். அவர்களை அலைக்கழிக்கக்கூடாது. எமது மாகாணத்தை நாம் அபிவிருத்தியடைந்த மாகாணமாக மாற்றும் இலக்கை நோக்கிப் பயணிக்க அனைவரும் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும்’ என்றார் ஆளுநர்.
இந்த நிகழ்வில் பிரதேச கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டதுடன், வாசிப்புமாத போட்டியில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. பருத்தித்துறை பிரதேச சபையின் செயலர் அ.வினோராஜ், வடக்கு மாகாண ஆளுநரை பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் நினைவுச் சின்னமும் வழங்கினார். மேலும், பருத்தித்துறை பிரதேச சபையின் நிகழ்நிலை மூலமான கட்டணங்களைச் செலுத்தும் திட்டமும் ஆளுநரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.