;
Athirady Tamil News

வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், யு.என்.டி.பி. நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota க்கும் இடையிலான சந்திப்பு

0

வடக்கு மாகாணத்தின் தேவைப்பாடுகள் தொடர்பிலும், யு.என்.டி.பி. நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களுக்கும், யு.என்.டி.பி. நிறுவனத்தின் வதிவிடப் பிரதிநிதி Azusa Kubota க்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை மாலை (11.12.2024) இடம்பெற்றது.

உள்ளூராட்சி அமைப்புக்களை வலுப்படுத்தும் தமது வேலைத் திட்டம் தொடர்பாக விரிவாக வதிவிடப்பிரதிநிதியால் ஆளுநருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

உள்ளூராட்சிமன்றங்களின் சேவைகளை நிகழ்நிலைப்படுத்துவதன் (Online service) தேவைப்பாடு மற்றும் அதனால் ஏற்படும் சாதகமான நிலைமைகள் தொடர்பிலும் குறிப்பிட்ட ஆளுநர் வடக்கு மாகாணத்திலும் அது நடைமுறைப்படுத்தப்படுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் மீள்குடியமர்ந்த மக்களுக்கான வாழ்வாதார உதவிகள் உட்பட பல்வேறு உதவிகளை யு.என்.டி.பி. நிறுவனமும் ஐ.நா. முகவர் அமைப்புக்களும் வழங்கியமைக்கு ஆளுநர் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் மீளக்குடியமர்வதற்குரிய தேவைப்பாடுகளையும் ஆளுநர் குறிப்பிட்டார். வடக்கு மாகாணத்தின் மிக முக்கியமான விவசாயம் மற்றும் மீன்பிடி பொருளாதார மேம்பாட்டுக்கான உதவிகளின் தேவைப்பாடுகளையும் ஆளுநர் இந்தச் சந்திப்பில் வலியுறுத்தினார்.

பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் தாம் கேட்டறிந்த விடயங்களை ஆளுநருடன் பகிர்ந்துகொண்ட யு.என்.டி.பி. வதிவிடப் பிரதிநிதி நுண்நிதிக் கடன்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தார்.

வடக்கு மாகாணத்தில் யு.என்.டி.பி. நிறுவனத்தால் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு அறிக்கையையும் ஆளுநரிடம் அவர் ஒப்படைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.