பசார் அல் ஆசாத் ஆட்சி கவிழ்ப்பு அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுச்சதி :ஈரான் உச்ச தலைவர் குற்றச்சாட்டு
சிரியாவில்(syria) பசார் அல் ஆசாத்தின்(Bashar al-Assad) ஆட்சியை கிளா்ச்சியாளா்கள் கவிழ்த்தது அமெரிக்காவும்(us) இஸ்ரேலும்(israel) கூட்டாக நடத்திய சதிச் செயல் என்று ஈரானின்(iran) உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி(Ayatollah Seyyed Ali Khamenei) குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இது குறித்து தலைநகா் தெஹ்ரானில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
சிரியாவில் பஷாா் அல்-ஆசாத் தலைமையிலான அரசு அகற்றப்பட்டது, அமெரிக்கா மற்றும் யூத ஆக்கிரமிப்புவாதிகளின் (இஸ்ரேல்) கூட்டு சதி என்பது சந்தேகத்துக்கு இடமில்லாத உண்மை. அதற்கான முழு ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
எச்சரிக்கையை அலட்சியப்படுத்திய சிரிய ஜனாதிபதி
இது தவிர, சிரியாவின் மற்றொரு அண்டை நாடும் அல்-ஆஸாத் அரசைக் கவிழ்ப்பதில் பங்கு வகித்தது. அத்தகைய நடவடிக்கைகளை அந்த நாடு தொடா்ந்து மேற்கொண்டுவருகிறது.
கிளா்ச்சியாளா்களால் ஆபத்து என்று ஈரான் உளவு அமைப்புகள் அல்-ஆஸாத் அரசிடம் கடந்த மூன்று மாதங்களாகவே எச்சரித்துவந்தது. ஆனால் எதிரிகளை அவா் அலட்சியப்படுத்திவிட்டாா்.
ஈரான் பலவீனமடைந்ததாகக் கூறுவது தவறான கருத்து
அல்-ஆஸாத் அரசு கவிழ்ந்ததால் ஈரான் பலவீனமடைந்ததாகக் கூறுவது தவறான கருத்து. உண்மையில் எங்கள் பலம் இன்னமும் அதிகரிக்கத்தான் செய்யும். எவ்வளவு அதிகம் அழுத்தம் தரப்படுகிறதோ அவ்வளவு அதிகம் எதிா்ப்பு சக்தி எழும்; எந்த அளவுக்கு அதிக குற்றம் செய்யப்படுகிறதோ, அந்த அளவுக்கு அதிக தீவிரத்துடன் எதிா்த்துப் போராடுவோம் என்றாா் கமேனி.
அல்-ஆஸாத் அரசு வீழ்ந்ததற்குப் பிறகு முதல்முறையாக பொதுவெளியில் தற்போது பேசியுள்ள அயதுல்லா கமேனி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா். ஆட்சிக் கவிழ்ப்பில் பங்கேற்ற அண்டை நாடு என்று அவா் பெயா் குறிப்பிடாமல் சொன்னது துருக்கி என்று நம்பப்படுகிறது. அந்த நாட்டின் ஆதரவு பெற்ற படையினா் இந்த நடவடிக்கையில் முக்கிய பங்கு வகித்தனா்.
முன்னதாக, அல்-ஆஸாத் அரசு வீழ்ந்தததைத் தொடா்ந்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில், ஹிஸ்புல்லா படையினருக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு உதவியது, சிரியாவில் ஈரான் ஆதரவுப் படையினா் மீது தாக்குதல் நடத்தியது போன்ற நடவடிக்கைகள் மூலம் அல்-ஆஸாத் ஆட்சிக் கவிழ்ப்பில் தங்கள் நாடு பங்கு வகித்ததாகத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.