கனடா – அமெரிக்காவிற்கு செல்ல வேண்டாம் : ரஷ்யர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ரஷ்ய (Russia) நாட்டுமக்களை அமெரிக்கா (United States) மற்றும் கனடாவுக்கு (Canada) பயணப்பட வேண்டாம் என திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா, கனடா மட்டுமின்றி சில ஐரோப்பிய நாடுகளுக்கும் பயணப்பட வேண்டாம் என்றும் அமெரிக்க (America) அதிகாரிகளால் ரஷ்ய மக்கள் வேட்டையாடப்படும் ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளரான மரியா ஜகரோவா (Maria Zakharova) இது தொடர்பில் தெரிவிக்கையில், அமெரிக்காவுடனான உறவுகள் முறிவின் விளிம்பில் தத்தளிப்பதாக தெரிவித்துள்ளார்.
நிர்வாகத்தின் தவறு
இது முற்றிலும் அமெரிக்க நிர்வாகத்தின் தவறு என குறிப்பிட்டுள்ள அவர், இந்த நெருக்கடியான சூழலில் ரஷ்ய மக்கள் தனிப்பட்ட முறையிலோ அல்லது உத்தியோகப்பூர்வமாகவோ அமெரிக்காவுக்கு பயணப்படுவது என்பது ஆபத்தை வரவழைக்கும் செயல் என சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா மட்டுமின்றி, அதன் நெருக்கமான நட்பு நாடுகளான கனடா மற்றும் குறிப்பிட்ட சில ஐரோப்பிய நாடுகளுக்கும் ரஷ்ய மக்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என வலியுறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.