சாலை விபத்தில் 2 மாதக் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி; கோவையில் கோரம்
கோவை அருகே டெம்போ மீது கார் மோதிய விபத்தில் 2 மாதக் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜேக்கப் ஆபிரகாம்,60. இவர் தனது மனைவி சீபா,55, மருமகள் எலீனா தாமஸ்,30, மற்றும் பேரன் ஆரான் (2 மாதம்) ஆகியோருடன் இன்று காலை 11 மணிக்கு சேலம் -கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரூ நோக்கி சென்று கொண்டிருந்தார். போடிபாளையம் பிரிவு அருகே வந்த போது, கார் ஜேக்கப் ஆபிரகாமின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதனால், நிலைதடுமாறி எதிரே வந்த ஐசர் டெம்போவின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. இதில், ஜேக்கப் ஆபிரகாம், அவரது மனைவி ஷீபா, பேரகுழந்தை ஆரான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மருமகள் எலினா தாமஸ் பலத்த காயங்களுடன் கோவை மாநகர் சுந்தராபுரம் அபிராமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
கோவை அருகே 2 மாதக் குழந்தையுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.