;
Athirady Tamil News

மனித உரிமைகள் தின நிகழ்வு

0

மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தால் பல பிரச்சினைகள் தீர்ந்து விடும் எனக் குறிப்பிட்ட ஆளுநர், மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் அரச திணைக்களங்கள் கூடுதல் கவனம் செலுத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய கிளையின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் தின நிகழ்வு ரில்கோ ஹோட்டலில் இன்று வியாழக்கிழமை (12.12.2024) மாலை இடம்பெற்றது.

பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்று உரையாற்றுகையிலேயே ஆளுநர் மேற்கண்டவாறு கூறினார்.

தலைமையுரையாற்றிய பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ், கைதுகளின்போதான சித்திரவதை தொடர்பிலும், அரச நிறுவனங்களில் இடம்பெறும் பாரபட்சம் தொடர்பிலுமே அதிகளவான முறைப்பாடுகள் தமக்குக் கிடைக்கப்பெறுவதாகக் குறிப்பிட்டார். அத்துடன் அரச நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகுதலுக்குரிய வசதிகள் போதுமானளவில் இல்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், வடக்கு மாகாணத்தின் தற்போதைய ஆளுநர் நா.வேதநாயகன், வடக்கின் 4 மாவட்டங்களில் மாவட்டச் செயலராக இருந்தவர். அவருக்கு இந்த மாகாணத்தின் உட்கட்டமைப்பு பிரச்சினைகள் நன்கு தெரியும். நிர்வாகத் தொய்வும் தெரியும். அப்படியான ஒருவரிடம் எமது கோரிக்கைகளை முன்வைப்பது தீர்ப்பதற்கு இலகுவானதாக இருக்கும் எனவும் பிராந்திய இணைப்பாளர் தனது உரையில் குறிப்பிட்டார்.

பிரதம விருந்தினர் உரையாற்றிய ஆளுநர்,
மனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும். அதன் ஊடாகத்தான் அதனை நிலைநாட்ட முடியும். பொலிஸார் சில இடங்களில் முறைப்பாடுகளை செய்யச் செல்லும் பொதுமக்களின் முறைப்பாடுகளை ஏற்பதில்லை என எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுகின்றன. இத்தகைய பாரபட்சங்கள் இல்லாதொழிக்கப்படுவது மனித உரிமைகளை நிலைநாட்ட உதவும்.
எமது சமூகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்ப்படவேண்டும். எமது அரச அலுவலகங்களை அவர்கள் இலகுவாக அணுகுவதற்கான வழிகள் ஏற்படுத்தப்படவேண்டும். யாழ். மாவட்டச் செயலராக இருந்தபோது மாற்றுத் திறனாளிகள் அணுகுவதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்திருந்தேன். மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் கூடுதல் கரிசனையுடன் நாம் செயற்படவேண்டும், என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில், மாற்றாற்றலுடையோரை ஆட்சேர்ப்புக்கான வழிகாட்டுதல் பரிந்துரைகள் அடங்கிய ஆவணம், ஆளுநர் அவர்களிடம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளரால் கையளிக்கப்பட்டது.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.