;
Athirady Tamil News

தொற்றா நோயிலிருந்து எம்மைப் பாதுகாக்க வைத்திய நிபுணர் த. பேரானந்தராஜா வழங்கிய அறிவுரைகள்

0

“ஓய்விற்கு முன்னர் ஆயத்தமாதல் தொடர்பான செயற்திறனான முதுமைப்பருவம் ” எனும் தலைப்பிலான செயலமர்வு யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (12.12.2024) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

ஓய்வுக் காலத்தில் உடலியல், உளவியல் நலம்” தொடர்பாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வைத்திய நிபுணர் த. பேரானந்தராஜா அவர்களால் கருத்துரை வழங்கப்பட்டது. அவர்தம் கருத்துரையில், மனிதனுடைய வாழ்வில் நோய்களானது இரண்டு வகையாக ஆதிக்கம் செலுத்தும் எனவும், அவை தொற்று நோய்கள் மற்றும் தொற்றா நோய்கள் என வகைப்படும் எனவும், தொற்றா நோயினை (நீரிழிவு, இரத்த அழுத்தம், கொழுப்புத் தன்மையுள்ள நோய்கள் போன்றவை) கண்டறிய கண்டிப்பாக 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரத்த பரிசோதனையும், இரத்த அழுத்தப் பரிசோதனையும் குறைந்தது 03 ஆண்டுக்கு ஒரு தடவையாவது பரிசோதித்துப் பார்த்தல் சிறப்பான விடயம் எனக் குறிப்பிட்டு, தொற்றா நோய்களைத் தவிர்க்க மனித வாழ்வில் பின்வரும் 15 விடயங்களை கடைப்பிடித்தால் மனிதன் ஆரோக்கியமாக வாழலாம் எனக் குறிப்பிட்டார்.

1. சீரான உடற்பயிற்சி
2.ஆழ்ந்த நித்திரை ( 06 மணித்தியாலங்களுக்கு குறையாத வகையில்)
3.விரதம் இருத்தல்
4.தியானம் இருத்தல் – அமைதியான சூழலில் மனதை ஒருமுகப்படுத்தி இருத்தல்
5.தன்னைத் தானே நேசித்தல்
6.மற்றவர்களை விரும்புதல்
7.மன்னிக்க பழகுதல் மற்றும் தேவையற்ற விடயங்களை மறத்தல்
8.சிரித்தல்
9.மரக்கறி வகைகள் மற்றும் பழவகைகளை போதியளவு உண்ணுதல்
10.இயற்கை உணவு வகைகளை உண்ணுதல் (கூழ், களி மற்றும் கஞ்சி வகைகள்)
11.சூரிய ஒளியில் நிற்றல் (தசை மற்றும் எலும்பு வளர்ச்சி – காலை 10 – 11 மணிக்கிடையில் சூரிய ஒளியில் நிற்பதால் விற்றமின் D சத்து கிடைக்கும்)
12.போதியளவு குடிநீர் அருந்துதல்
13.நேர காலத்திற்கு உண்ணுதல்.
14.என்றும் நன்றியுடையவர்களாக இருத்தல்.
15.நல்ல நண்பர்களுடன் பழகுதல்.

மேலும், வைத்திய நிபுணர் தெரிவிக்கையில்,

இன்றைய தொலைக்காட்சி நாடகங்கள் எதிர்வினைகளையே அதிகம் காட்சிப்படுத்துவதால் அதனைப் பார்ப்பவர்களுக்கு நோய்கள் வருவதற்கான சாத்தியப்பாடுகள் அதிகமாகவுள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிறருடன் நேரடி உரையாடல்களில் அதிகமாக ஈடுபட்டால் ஆரோக்கியமானது எனவும் குறிப்பிட்டார். மேலும், அதிக தொலைபேசிப் பாவனையும் அதிக நேரம் தொலைக்காட்சி பார்வையிடுவதும் மூளைத் திறன் பாதிக்கப்பட்டு மறதி நோய் ஏற்பட காரணமாக அமைவதாகவும் வைத்திய நிபுணர் விபரித்தார்.

மேலும் ஊடகங்கள் தமது முன் பக்கத்தில் எதிர்மறையான செய்திகளை வெளியிடுவதால் எதிர்மறையான சிந்தனைகளை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் எனவும், கூடியளவு அதனை தவிர்த்து நேர்மறையான செய்திகளை வெளியிடுவது வாசகர்களுக்கு ஆரோக்கியமானதாகவும் எனவும் வைத்திய நிபுணர் த. பேரானந்தராஜா தெரிவித்தார்.

இச் செயலமர்வில் நீண்ட காலம் சேவையாற்றிய பணியாளர்களின் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் (ETF), ஊழியர் சேம நிதியம் (EPF), ஓய்வூதியம் பெற்றுக்கொள்ளும் போது நபரின் சுயகோவை தயாரிப்பதற்கான செயன்முறைகள் மற்றும் அங்கத்தவராக உள்ளவர்களுக்கான சலுகைகள் மற்றும் திட்டமிடப்பட்ட முதுமைப் பருவம் தொடர்பாகவும் தெளிவூட்டல்கள் வளவாளர்களால் வழங்கப்பட்டது.

இச் செயலமர்வில் ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் பிராந்திய முகாமையாளர் திரு.ஜெ. தமிழழகன், தொழிற் திணைக்கள உதவி ஆணையாளர் திரு. அ.அ.தனேஷ், யாழ் பிரதேச செயலக கணக்காளர் திரு. க. சிறிதரன் மற்றும் மாவட்ட செயலக முதியோா் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் திருமதி. ஸ்பெல்மன் பாலகுமாரி ஆகியோர் வளவாளர்களாக பங்குபற்றினார்கள்.

ஓய்வூதியத்திற்கு தயாராகவுள்ள தேசிய வடிகாலமைப்புச் சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், மின்சார சபை, பனை அபிவிருத்திச் சபை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, தேசிய வீடமைப்பு அதிகார சபை, ப. நோ. கூ. சங்கம், இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.