அரச உத்தியோகத்தர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது: அர்ச்சுனா எம்.பியின் செயற்பாடு குறித்து சிறிதரன் எம் பி. கருத்து
அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித் தரத்திலே கூடியவர்களாகவும் இருப்பார்கள். எனவே அவர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது என தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார்.
வவுனியாவில் தமிழர் கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று (14.12) இடம் பெற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது நேற்றையதினம் (13.12) யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்சுனாவுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்கும் முரண்பாடு என வருகின்ற செய்தி தொடர்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக எவ்வாறு பார்க்கின்றீர்கள் என கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித் தரத்திலே கூடியவர்களாக இருக்கிறார்கள். அறிவு பூர்வமாக படித்துத் தான் அவர்கள் அந்த பதவிகளுக்கு வந்திருக்கிறார்கள். ஊடகவியலாளர்களுக்கும் எங்களை விட ஊடகத்துறையில் அனுபவம் கூடுதலாகவே இருக்கும். ஆகவே என்னை பொறுத்த வரைக்கும் நாங்கள் அவர்களை அணுகுவதற்கான முறை இருக்கிறது. மனிதாபிமானத்தையும், மனித மூலதனத்தையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் நாங்கள் மிகவும் கண்ணியத்தோடும் பொறுப்போடும் நடக்க வேண்டும்.
எங்களுடைய கட்சி இதுவரை காலமும் அவ்வாறு தான் நடந்திருக்கிறது. தொடர்ந்தும் அந்த பொறுப்போடும், கண்ணியத்தோடும் அரச உத்தியோகத்தர்களோடு அணுகி செயல்படுவோம்.
சபாநாயகரின் இராஜினாமா தொடர்பில் கேட்டபோது,
சபாநாயகராக இருப்பதற்கு கலாநிதி பட்டமோ எந்தவிதமான பதவி நிலைமைகளோ இருக்க வேண்டும் என்ற சட்டம் இல்லை. எனினும் அவர் தனது பெயருக்கு முன்பாக கலாநிதி என்ற பட்டத்தை பயன்படுத்தி இருக்கிறார். எனினும் அவர் அந்த பதவிக்கு உரியவர் அல்ல என்று சிலர் அடையாளப்படுத்துவதன் காரணமாக பெருந்தன்மையோடு ஜனநாயக முறைப்படி தனது கட்சியையும், மக்களையும் கருத்தில் கொண்டு தனது நல்ல மனநிலையை வெளிப்படுத்தும் நோக்கோடு ராஜினாமா செய்திருக்கின்றார். இது வரலாற்றில் முன்னுதாரணமாகும்.
இது தொடர்பில் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவதற்கு இடையில் அவர் பெற்ற பட்டம் உண்மையாக இருந்தாலும் கூட அந்தப் பட்டம் உறுதிப்படுத்தப்படும் வரைக்கும் தான் விலகி இருப்பேன் என்று கூறுவது மிகப்பெரும் ஜனநாயகமாகும். அந்த வகையில் சபாநாயகர் மேற்கொண்ட விடயத்தை நாங்கள் வரவேற்கிறோம்.
ஏனைய தமிழ் கட்சிகளோடு பயணிப்பது தொடர்பில் பதிலளிக்கையில்,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் இணைந்து பயணிக்கிறார்களா என்பது எனக்கு தெரியாது. ஆனால் எங்களைப் பொறுத்த வரைக்கும் எங்களுடைய மத்திய குழு மற்றும் அரசியல் குழுவிலே கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட்டதன் பின்பாக சேர்ந்து செயல்படுதல், இணைந்து பயணிப்பது தொடர்பான விடயங்களை பற்றி பேசலாம்.
நாங்கள் யாரையும் வெளியில் விடவில்லை. இப்போதும் ஒற்றுமையாக பலமாக செயல்படுவதற்கான கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். தேர்தலுக்கு முன்னரும் பகிரங்கமாக கோரிக்கையை முன்வைத்தவர்கள் எங்களுடைய கட்சியினர் தான். பாராளுமன்றத் தேர்தல் இடம்பெறுகின்ற போது எல்லா மேடைகளிலும் அதனை தெளிவாக கூறியிருக்கிறேன். எங்களுடைய கட்சியை பலப்படுத்துவதற்கும் கூட்டமைப்பை உருவாக்கி மக்களிடம் கொண்டு செல்வதற்கான ஆணையை தாருங்கள் என்று கேட்டிருந்தேன். அந்த ஆணையை மக்கள் தந்திருக்கிறார்கள். எனினும் தனி மனிதனாக நான் அதனை செய்ய முடியாது. மத்தியகுழு மற்றும் அரசியல் குழுவின் கூட்டு முடிவின் பிரகாரம் அந்த ஒற்றுமைக்கான பாலத்தையும், பயணத்தையும் மேற்கொள்வோம் என்றார்.
தமிழரசில் இருந்து சிலர் நீக்கம்: எதிர்வரும் நாட்களில் இடம்பெறும் என்கிறார் சுமந்திரன்!