அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பான முன்னாயத்தக் கூட்டம்
வடக்கு மாகாணத்துக்கான நீண்ட கால அபிவிருத்தித் திட்டங்களை தயாரிப்பது தொடர்பான முன்னாயத்தக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
கூட்டத்தின் ஆரம்பத்தில் அறிமுகவுரை நிகழ்த்திய ஆளுநர்,
தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு மாகாணத்தில் மிகப்பெரிய அபிவிருத்தியை முன்னெடுக்க வாய்ப்புள்ளது.
எனவே மாகாணத்தில் மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கவேண்டிய திட்டங்களை விரைந்து திணைக்களங்கள் தயாரிக்கவேண்டும் எனவும், ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் ஆகியனவற்றின் ஆலோசகராக இருந்த திருமதி ஜீவா பெருமாள்பிள்ளை அவ்வாறான திட்டங்களை தயாரிப்பதற்கு உதவுவதற்காக வந்திருப்பதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட திருமதி ஜீவா பெருமாள்பிள்ளை, திட்டங்களுக்கான யோசனைகள் முன்மொழிவுகள் திணைக்களங்களினுடயதாக இருக்கவேண்டும் எனவும் அதனை எவ்வாறு திட்ட முன்மொழிவாக மாற்றியமைக்க முடியும் என்ற ஆலோசனையை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலர்கள், திணைக்களங்களின் பணிப்பாளர்கள், திணைக்களத் தலைவர்கள் வடக்கு மாகாண அபிவிருத்திக்கான திட்டமுன்மொழிவுகளை முன்வைத்தனர்.
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர், பாடசாலை வகுப்பறைகளின் விரிவாக்கம், தளபாடங்கள் என்பன உட்பட தமது தேவைகளை முன்வைத்தார். உள்ளூராட்சி அமைச்சின் செயலர், ஒவ்வொரு பிரதேச சபையில் ஒரு நூலகத்தை தெரிவு செய்து கணினி கற்கை வசதிகளுடன் மேம்படுத்துவது தொடர்பான திட்டத்தை முன்மொழிந்தார்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணத்துக்கான பணிப்பாளர், நெடுந்தீவு, குறிகாட்டுவான் துறைமுகங்களின் அபிவிருத்தி, ஊர்காவற்றுறை – காரைநகர் பாலம், வல்லை, கோப்பாய் மற்றும் வண்ணாத்திப் பாலம் என்பவற்றை அமைப்பது உள்ளிட்ட முன்மொழிவுகளையும், சங்குப்பிட்டிப் பாலத்தை அமைப்பது தொடர்பான முன்மொழிவுகளையும் குறிப்பிட்டார்.
வீதி அபிவிருத்தி திணைக்களமும் தமது ஆளுகைக்கு உட்பட்ட வீதிகளின் மறுசீரமைப்பு, பாலங்கள், துறைமுகங்களின் மறுசீரமைப்புக்கான யோசனைகளை முன்வைத்தனர்.
வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் திண்மக் கழிவுகளை எரியூட்டுவதற்கான எரியூட்டியின் தேவைப்பாட்;டை முன்வைத்தார்.
அத்துடன் தீயணைப்பு வாகனத்தின் தேவைப்பாட்டையும் குறிப்பிட்டார்.
கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர், வடக்கு மாகாணத்திலுள்ள ஆடுகள் மற்றும் மாடுகளை மேம்படுத்துவது தொடர்பான முன்மொழிவை முன்வைத்தார்.
நீர்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர், பாலியாறு திட்டம், யாழ்ப்பாணத்துக்கான ஆறு திட்டம் என்பன உள்ளிட்ட 4 பிரதான திட்டங்களின் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தார்.
விவசாயத் திணைக்களத்தால் விவசாய உற்பத்திப் பொருட்களை களஞ்சியப்படுத்தலுக்கான கோரிக்கை திணைக்களப் பணிப்பாளரால் முன்வைக்கப்பட்டது.
மேலும் வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர், மருத்துவமனைகளின் கழிவு நீர் முகாமைத்துவத்தை முன்னெடுப்பதற்கான திட்ட முன்மொழிவையும், தீவுப் பகுதிகளுக்கான அம்புலன்ஸ் படகின் தேவையையும் குறிப்பிட்டார்.
மேலும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர், கடந்த காலங்களில் தயாரிக்கப்பட்ட யாழ். நகருக்கான வெள்ளத்தடுப்பு திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பில் முன்மொழிந்தார்.
மேலும், யாழ்ப்பாணம் புதிய சந்தைக் கட்டத் தொகுதியின் மூன்றாம் கட்டத்தை செயற்படுத்துவதற்கான திட்டத்தையும் முன்வைத்தார்.
அத்துடன் உயிர்கொல்லி போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வளிக்கும் நிலையத்தை வடக்கில் அமைப்பதற்கான தேவைப்பாட்டையும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு திணைக்களங்களினதும் முன்மொழிவுகள் திட்டவரைவுகளாக தயாரிக்கப்பட்டு வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல் ஊடாக அவை தொகுக்கப்பட்டு ஆளுநரிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த நடவடிக்கைகளை விரைந்து முடிக்குமாறு ஆளுநர், அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.