;
Athirady Tamil News

“Verdant Warriors” இனால் நடாத்தப்பட்ட சூழலியல் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்கள்

0

கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் இரண்டாம் வருட மாணவர்களால் “சூழலியல் தாக்க மதிப்பீடு” மற்றும் “நிலை பேறான அபிவிருத்தி” ஆகிய இரு தலைப்புக்களில் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டன.

சட்ட பீட மாணவர்கள் தங்கள் அரையாண்டின் “சூழலியல் சட்டம்” எனும் பாடத்தின் தொடர் மதிப்பீட்டின் பொருட்டு “சூழலியல் தாக்க மதிப்பீடு” மற்றும் “நிலை பேறான அபிவிருத்தி” ஆகிய இரு தலைப்புக்களில் விழிப்புணர்வுக் கலந்துரையாடல்களை கடந்த 04ஆம் திகதி வாழைச் சேனை மீன்பிடித் துறைமுக வளாகம் மற்றும் மட்/மம/ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயம் ஆகிய இரு இடங்களில் நடாத்தினர்.

முதலாவது விழிப்புணர்வுக் கலந்துரையாடலானது “சூழலியல் தாக்க மதிப்பீடு” என்ற தலைப்பில் வாழைச்சேனை துறைமுக வளாகத்தில் காலை இடம்பெற்றது.

துறைமுக முகாமையாளர், வாழைச் சேனை மீன்பிடி சங்கத் தலைவர் ஆகியோரின் தலைமையில் இடம் பெற்ற அந்நிகழ்வில், அல்-அமான் ஆழ் கடல் படகு உரிமையாளர் அமைப்பு, அல்-சபா மீனவர் அமைப்பு, வாழைச் சேனை மீன் வியாபாரிகள் அமைப்பு, வாழைச் சேனை மீன்பிடித் துறைமுக அபிவிருத்திக் குழு ஆகிவற்றை சேர்ந்தோரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், சூழலியல் தாக்க மதிப்பீடு என்றால் என்ன ?, இலங்கையின் சூழலியல் சார் சட்டங்கள் யாவை ?, சூழலியல் தாக்க மதிப்பீடு மேற்கொள்ளும் முறை, அதன் முக்கியத்துவம், கரையோர பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தி திட்டங்களால் ஏற்படும் பிரச்சினைகள், சூழலியல் தாக்க மதிப்பீட்டைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் போன்ற முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

அதன் போது நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் ஆர்வத்துடன் தமது பங்களிப்பை வழங்கியதுடன் தமக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவு பெற்றுக் கொண்டனர்.

மேலும் மீன்பிடித் தொழில் தொடர்பாக அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

கலந்துரையாடலின் இறுதியில், பல்கலைக்கழக 2ம் வருட சட்டபீட மாணவர்களால் கழிவுத்தொட்டி மீன்பிடி சங்கத்திற்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.

மாணவர்களின் இரண்டாவது விழிப்புணர்வுக் கலந்துரையாடல் மட்/மம/ஆயிஷா மகளிர் மகா வித்தியாலயத்தின் முதலாம் இரண்டாம் வருட உயர்தரப்பிரிவு மாணவர்களுக்கு நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வில் நிலை பேறான அபிவிருத்தி என்பதன் விளக்கம், தோற்றம், நோக்கம், அமுலாக்கம், அண்மைக்காலப் போக்குகள், நிலைபேண் அபிவிருத்திக்கு மாணவர்களின் பங்களிப்பு போன்ற தலைப்புக்கள் கலந்துரையாடப்பட்டன.

இதன்போது மாணவர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு நிகழ்வில் கலந்து கொண்டு தமது பூரண பங்களிப்பினை வழங்கியதோடு தமக்கு ஏற்பட்ட சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவு பெற்றுக்கொண்டனர்.

விழிப்புணர்வு நிகழ்வின் இறுதி அம்சமாக பல்கலைக்கழக மாணவர்களால் பாடசாலைக்கு மரங்கள் வழங்கி வைக்கப்பட்டன

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.