;
Athirady Tamil News

அர்ச்சுனாவின் செயற்பாடு குறித்து அரச உத்தியோகத்தர்களுடன் அணுகுவதற்கு சிறிதரனின் கருத்து

0

அரச அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்திலே கூடியவர்களாகவும் இருப்பார்கள் எனவே அவர்களுடன் அணுகுவதற்கு முறையுள்ளது என யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார்.

சனிக்கிழமை (14) வவுனியாவில் தமிழர் கட்சியின் மத்திய குழு கூட்டம் இடம் பெற்றதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வெள்ளிக்கிழமை (13) யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுனாவுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும் முரண்பாடு என வருகின்ற செய்தி தொடர்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக எவ்வாறு பார்க்கின்றீர்கள் என கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அரசு அதிகாரிகளாக இருப்பவர்கள் எங்களை விட கல்வித்தரத்திலே கூடியவர்களாக இருக்கிறார்கள். அறிவுபூர்வமாக படித்துத்தான் அவர்கள் அந்த பதவிகளுக்கு வந்திருக்கிறார்கள்.

ஊடகவியலாளர்களுக்கும் எங்களை விட ஊடகத்துறையில் அனுபவம் கூடுதலாகவே இருக்கும். ஆகவே என்னை பொறுத்த வரைக்கும் நாங்கள் அவர்களை அணுகுவதற்கான முறை இருக்கிறது.

மனிதாபிமானத்தையும் மனித மூலதனத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது தொடர்பில் நாங்கள் மிகவும் கண்ணியத்தோடும் பொறுப்போடும் நடக்க வேண்டும். எங்களுடைய கட்சி இதுவரை காலமும் அவ்வாறு தான் நடந்திருக்கிறது தொடர்ந்தும் அந்த பொறுப்போடும் கண்ணியத்தோடும் அரச உத்தியோத்தர்களோடு அணுகி செயல்படுவோம்.

சபாநாயகரின் இராஜினாமா தொடர்பில் கேட்டபோது, சபாநாயகராக இருப்பதற்கு கலாநிதி பட்டமோ எந்தவிதமான பதவி நிலைமைகள் இருக்க வேண்டும் என்ற சட்டம் இல்லை. எனினும் அவர் தனது பெயருக்கு முன்பாக கலாநிதி என்ற பட்டத்தை பயன்படுத்தி இருக்கிறார்.

எனினும் அவர் அந்த பதவிக்கு உரியவர் அல்ல என்று சிலர் அடையாளப்படுத்துவதன் காரணமாக பெருந்தன்மையோடு ஜனநாயக முறைப்படி தனது கட்சியையும் மக்களையும் கருத்தில் கொண்டு தனது நல்ல மனநிலையை வெளிப்படுத்தும் நோக்கோடு ராஜினாமா செய்திருக்கின்றார். இது வரலாற்றில் முன்னுதாரணமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.