;
Athirady Tamil News

திருமாவளவன் சொன்ன வார்த்தை; விசிகவிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா – என்ன காரணம்?

0

விசிகவிலிருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

ஆதவ் அர்ஜுனா
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறி 6 மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டார்.

திமுகவை ஆதவ் அர்ஜுனா கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் திமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே திருமாவளவன் இந்த நடவடிக்கையை எடுத்தார் என விமர்சிக்கப்பட்டு வந்தது.

வேறு செயல்திட்டம்
இது குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவனிடம், கேள்வி எழுப்பியபோது, “இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நேரத்தில் கட்சியில் மீண்டும் சேரும் எண்ணம் இருந்தால் அவர் அமைதி காத்திருக்க வேண்டும்.

ஆனால் அவர் தொடர்ந்து இது போன்ற கருத்துக்களை கூறி வருவதை பார்க்கும் பொது அவருக்கு வேறு செயல்திட்டம் உள்ளது போல் தெரிகிறது என கூறினார்.

விலகிய ஆதவ் அர்ஜுனா
இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா விசிகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினுடைய வியூக வகுப்பாளராக பணியாற்றத் தொடங்கி, கட்சியின் அடிப்படை உறுப்பினராக இணைந்தேன். தங்களுடைய சீரிய எண்ணத்தின்பால் எனக்குத் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தீர்கள். அந்த பொறுப்புகளோடு கடந்த 2 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் கட்சி பணியாற்றினேன்.

சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் சாதிய கட்டமைப்புகள். அதன் அடித்தளம், தொடர்ந்து நீளும் அதன் அதிகாரக் கரங்கள், பாதிக்கப்படும் மக்களின் துயர்கள் ஆகியவற்றை நான் ஆற்றிய களப்பணிகளில் உணர்ந்தேன். அதற்கு எதிரான செயற்திட்டங்களைக் கொள்கை ரீதியாக வகுத்து என்னைச் செயற்பட வைத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

எளிய மக்கள் குறிப்பாக, ‘சாதிய ஆதிக்கத்தினால் காலம்காலமாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தை அடைய வேண்டும் என்ற நோக்கில்தான் நான் என்னை நமது கட்சியில் இணைத்துக்கொண்டேன். விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும் எனக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இல்லை.

பயணம் தொடரும்
குறிப்பாக, கட்சியின் வளர்ச்சி என்ற ஒற்றைக் காரணியைத் தாண்டி எனக்கு வேறு எந்த செயற்திட்டங்களும் இந்த நிமிடம் வரை இல்லை என்பதை தங்களுக்குத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். எனக்குள் எழுந்த சில நியாயமான கோபங்கள் மற்றும் மக்கள் நலனுக்கு எதிரான விவகாரங்களில் என்னிடமிருந்து வெளிப்படும் கருத்துகள் விவாதப்பொருளாக மாறுகிறது. அது ஒருகட்டத்தில் எனக்கும், உங்களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தும் போக்காக மாறுவதை நான் விரும்பவில்லை.

ஏற்கனவே, கட்சியிலிருந்து என்னை ஆறு மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், இதுபோன்ற வீணான விவாதங்களுக்கு வழிவகுக்க கூடாது என்று எண்ணுகிறேன். இனி வருங்காலங்களில், புரட்சியாளர் அம்பேத்கர் கூறியதை போல அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புங்கள்” என்கிற அடிப்பையில் சாதி ஒழிப்பு, சமூக நீதி, எளிய மக்களுக்கான அரசியல் உரிமைகள் என்ற நிலைப்பாட்டோடு மதப் பெரும்பான்மைவாதம், பெண்ணடிமைத்தனம், மக்களை வஞ்சிக்கும் ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் அரசியல் போராட்டங்களில் தங்களுடன் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.