ரூ 2,100 கோடி தொகையுடன் ரஷ்யாவுக்கு தப்பிய சிரியாவின் அசாத்: வெளிவரும் புதிய தகவல்
இராணுவ உதவிகளுக்காக ரஷ்யாவை நம்பியிருந்த நிலையில், சிரியாவின் ஜனாதிபதியாக இருந்த அசாத் சுமார் 2100 கோடி தொகையை ரஷ்யாவுக்கு கடத்தியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் சொகுசு மாளிகைகள்
கடந்த 2018 மற்றும் 2019 காலகட்டத்தில் ரஷ்யாவின் Vnukovo விமான நிலையம் ஊடாக அசாத் அரசாங்கம் சுமார் 2 டன் பணத்தாள்களை அந்த நாட்டுக்கு அனுப்பியுள்ளதாகவும், அங்குள்ள வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டதாகவும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ரஷ்யாவின் வாக்னர் குழு உட்பட, இராணுவ ஆதரவுக்கு ரஷ்யாவை சிரியா நம்பியிருந்த போதே, பணத்தாள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் தான், அசாத் குடும்பம் ரஷ்யாவில் சொகுசு மாளிகைகளை வாங்கியுள்ளது.
அசாதின் ஆட்சி சிரியாவின் வளங்களை சூறையாடியதாகவும், அதன் சொந்த மக்களுக்கு எதிரான போருக்கு நிதியளிப்பதற்காக குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மார்ச் 2018 மற்றும் செப்டம்பர் 2019 க்கு இடையில் ரஷ்யாவிற்கு அமெரிக்க டொலர் மற்றும் யூரோ பணத்தாள்களை டன் கணக்காக கொண்டு சென்றுள்ளது. இந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 21 முறை பணத்தாள்களை விமானம் மூலமாக அசாத் நிர்வாகம் ரஷ்யாவுக்கு கடத்தியுள்ளது.
250 மில்லியன் டொலர்
மொத்தம் 250 மில்லியன் டொலர் அல்லது இந்திய மதிப்பில் ரூ 2120 கோடி என்றே தெரிய வந்துள்ளது. வெளியான தரவுகளின் அடிப்படையில், 2018ல் இருந்தே பணத்தாள்களை ரஷ்யாவுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை அசாத் தொடங்கியுள்ளார்.
மேலும் பொருளாதாரத் தடைகள் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கோதுமை வாங்கும் பொருட்டு பணத்தாள்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. நாடு மொத்தமாக பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டபோது சிரியாவில் பணத்தாள்கள் மட்டுமே கைவசமிருந்துள்ளது.
சிரியாவில் இருந்து 21 முறை விமானங்களில் பணத்தாள்கள் அனுப்பியதாக தரவுகள் பதிவாகியிருக்க, ரஷ்யாவில் அப்படியான எந்த பதிவுகளும் இல்லை என்றே கூறப்படுகிறது. மேலும், போதைப் பொருள் எரிபொருள் கடத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளாலும் அசாத் அரசாங்கம் பணம் சம்பாதித்துள்ளது.