என் கணவர் என்னை கொன்றுவிடுவார்! லண்டனை உலுக்கிய சம்பவத்தில் முன்பே எச்சரித்த இந்தியப்பெண்
லண்டனில் கொல்லப்பட்ட இளம்பெண் ஹர்ஷிதா பிரெல்லா, தனது கணவர் தன்னை கொன்றுவிடுவார் என முன்பே எச்சரித்ததாக அவரது தாய் வெளிப்படுத்தியுள்ளார்.
ஹர்ஷிதா பிரெல்லா
கடந்த நவம்பர் மாதம் கிழக்கு லண்டனில், இந்தியாவைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் ஹர்ஷிதா பிரெல்லா சடலமாக மீட்கப்பட்டார்.
அவரது கணவர் பங்கஜ் லம்பா கொலை செய்துவிட்டு தப்பியிருக்கலாம் என நம்புவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நடந்து கிட்டதட்ட ஒரு மாதத்திற்கு பிறகு, ஹர்ஷிதாவின் தாயார் சுதேஷ் குமாரி தற்போது முன்னரே தனது மகள் எச்சரித்ததாக தெரிவித்துள்ளார்.
என்னைக் கொன்றுவிடுவார்
அவர் இதுதொடர்பாக கூறுகையில், “நான் அவனிடம் திரும்ப செல்ல மாட்டேன் என்று அவள் கூறினாள். அவர் என்னைக் கொன்றுவிடுவார். லம்பா எனது வாழ்க்கையை மோசமாக்கினார்” என்றார்.
அதேபோல் ஹர்ஷிதாவின் தந்தை சத்பீர் பிரெல்லா, தன் மருமகன் லம்பா மீது குடும்ப வன்முறையை குற்றம்சாட்டினார். மேலும் அவர் தனது மகளை மிகவும் மோசமாக அடித்ததாகவும், அவள் இறப்பதற்கு சில வாரங்களில் கருச்சிதைவு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இவ்வழக்கில் பங்கஜ் லம்பா இந்தியாவில் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கூறுகின்றனர். ஆனால், உள்ளூர் பொலிஸார் தங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.