யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி தட்டாதெரு சந்தியில் மின் விபத்தில் பசு ஒன்று உயிரிழந்தது
யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதி தட்டாதெரு சந்தியில் பாதசாரி கடவைக்கு அருகே அதிகாரிகளின் அசமந்தத்தால் இடம்பெற்ற மின் விபத்தில் பசு ஒன்று உயிரிழந்து பலரது உயிரை காப்பாற்றிய சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றது.
யாழின் பிரதான சந்திகளில் ஒன்றானதும் தினமும் ஆயிரக்கணக்கிலானோர் பயணிக்க கூடியதுமாகிய குறித்த பகுதியில் மின் விளக்கினை சுற்றி கொடிவகை தாவரம் ஒன்று படர்ந்து மின்சார வடங்களிலும் சுற்றிப்பரவி உள்ளது.
இதனைப் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் எவரும் கவனிக்காது விட்டிருந்த நிலையில் நேற்று திடீரென மின்ஒழுக்கு ஏற்பட்டு குறித்த கொடி முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.
இதன்போது எதேர்ச்சியாக குறித்த கொடியினை உணவாக உட்கொள்ள விளைந்த பசு மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனை அவதானித்த குறித்த வீதியால் பயணித்தவர்கள் மற்றும் அருகில் இருந்த கால்நடை மருத்துவர்கள் என பலரும் குறித்த பசுவை காக்க கடும் பிரயத்தனம் மேற்கொண்டிருந்த போதிலும் குறித்த பசுவின் உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்தமையினாலும் குறித்த வீதியில் மழைநீர் தேங்கி நின்றமையினாலும் பசுவை காக்க முனைந்தவர்கள் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது.
எனவே அவர்கள் பசுவினை காக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்க நேரிட்டது இந்நிலையில் அதீத மின்சாரத் தாக்குதலுக்கு இலக்கான பசு பரிதாபகரமாக உயிரிழந்தது.
இது தினமும் பலரும் பயன்படுத்தும் பாதை என்பதனால் பசுவின் நிலை எவருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடும் எனவும் பெறுமதிமிக்க பசுவின் உயிர்பறிக்கப்பட்டமைக்கு உரிய அதிகாரிகள் பொறுப்பு கூற வேண்டும் எனவும் தெரிவித்து பொதுமக்களும் அவ் வீதியால் பயணித்தவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த மின்சார சபையினரால் இரண்டுக்கு மேற்பட்ட முறைகள் முயன்ற பின்னரே மின்னை கட்டுக்குள் கொண்டுவர முடிந்தது.
ஆயினும் குறித்த பகுதியில் மின்சாரம் பாய்வதாக பொது மக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் இதற்கு மின்சாரசபையினர் தாம் பொறுப்பல்ல
எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் யாழ்.மாநகர சபையே இதற்கு பொறுப்பு எனவும் தெரிவித்தனர்.
இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் ஏனைய அதிகாரிகள் வரும் வரை அவர்களை அப்பிரதேசத்திலேயே தரித்திருந்து உரிய தீர்வை பெற்று தருமாறு கூறினர் எனினும் தாம் துரித சேவை இலக்கத்துடன் தொடர்புபட்டவர்கள் எனவும் எனவே தம்மால் ஒரே பகுதியில் அதிக நேரம் தரித்திருக்க முடியாது எனவும் தெரிவித்த மின்சாரசபை அதிகாரிகள் அவ்விடத்தில் இருந்து விலகினர்.
எந்த அதிகாரிகளும் குறித்த சம்பவத்திற்கு பொறுப்பேற்காத நிலையில் சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள குறித்த பசுவின் உரிமையாளர் தீர்மானித்தார்.
அசம்பாவிதங்கள் நடந்த பிறகு நடவடிக்கைகள் எடுக்காது இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் இடம்பெறாத வகையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் ஆவன செய்வார்கள் என எதிர்பார்க்கின்றோம்.