ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம்… 100,000 டொலர் சன்மானம்: ரஷ்ய தளபதி கொலையின் பின்னணி
விளாடிமிர் புடினின் அணு ஆயுத தளபதி படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உக்ரைனால் அனுப்பப்பட்டதாக கூறப்படும் இருவரை ரஷ்யா கைது செய்துள்ளது.
உஸ்பெகிஸ்தான் நாட்டவர்
ரஷ்யாவை மிரள வைத்துள்ள இச்சம்பவத்தில் 54 வயதான தளபதி இகோர் கிரில்லோவ் படுகொலை செய்யப்பட்டார். மின்சார ஸ்கூட்டரில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்து படுகொலையை நடத்தியுள்ளனர்.
மாஸ்கோவில் உள்ள தமது குடியிருப்பில் இருந்து தளபதியும் அவரது உதவியாளரும் வெளியேறிய சில நொடிகளில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த நிலையில் வழக்கை விசாரித்துவரும் அதிகாரிகள் தரப்பு வெளியிட்டுள்ள தகவலில்,
தளபதியின் படுகொலைக்கு காரணமான வெடிகுண்டை அமைத்தது தாம் என உஸ்பெகிஸ்தான் நாட்டவரான 29 வயது நபர் ஒப்புக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
உக்ரைனின் பாதுகாப்பு சேவை அதிகாரிகளே மாஸ்கோவுக்கு தம்மை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், வெகுமதியாக 100,000 டொலர் தொகையும் ஐரோப்பிய நாடொன்றில் குடியேறும் வாய்ப்பும் வழங்குவதாக உக்ரைன் உறுதி அளித்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
அதிகாரிகள் மீதும் பழி வாங்கப்படும்
மாஸ்கோவில் அவர் சென்று சேர்ந்ததும் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டை அவரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவித்துள்ளார். தளபதி இகோர் மீதான தாக்குதல் தொடர்பில் ஈடுபட்ட அனைத்து உக்ரைன் அதிகாரிகள் மீதும் பழி வாங்கப்படும் என ரஷ்யாவின் பாதுகாப்பு சேவை சபதமெடுத்துள்ளது.
இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய இன்னொருவரும் கைதாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, ரஷ்ய தளபதி ஒருவரை கொல்லப் போகிறோம் என்பதையும் உக்ரைன் இதன் பின்னணியில் செயல்படுவதாகவும் கைதானவர்களில் ஒருவருக்கு தெரிந்திருக்கவில்லை என்றே கூறப்படுகிறது.