கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் செயற்பாடுகளை பார்வையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள்!
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் உற்பத்தித்திறன் சார்ந்த செயற்பாடுகளை பார்வையிடுவதற்காக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் இன்று(19) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.
குறித்த விஜயமானது கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தின் உற்பத்தித்திறன் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், கள அனுபவப் பகிர்வுகளை பெறுவதற்காக அமைந்திருந்தது.
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் கிளைகளுக்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் உற்பத்தி திறன் சார்ந்த செயற்பாடுகளை பார்வையிட்டனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகம் இறுதியாக நடைபெற்ற உற்பத்தித் திறன் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது மக்களுக்கு சிறந்த வினைத்திறனான சேவையினை வழங்கும் நோக்குடன் பொலிஸ் மா அதிபரின் எண்ணக்கருவுக்கமைய பொலிஸ் நிலையங்களை 5S திட்டத்திற்கு கொண்டுவரும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில் வடமாகாணத்தில் முதலாவது பொலிஸ் நிலையமாக கிளிநொச்சி பளை பொலிஸ் நிலையம் 5S திட்டத்தின் கீழ் செயற்படும் முன்மாதிரி பொலிஸ் நிலையமாக அண்மையில் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
குறித்த கள விஜயத்தில் இராமநாதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிளிநொச்சி மாவட்ட செயலக உற்பத்தி திறன் பிரிவின் மாவட்ட இணைப்பாளர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.