10 ஆண்டுகால மர்மம்! காணாமல் போன MH370 விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடக்கம்
காணாமல் போன மலேசியாவின் MH370 விமானத்தை தேடும் பணி மீண்டும் தொடங்கப்பட உள்ளது.
காணாமல் போன மலேசிய விமானம்
மலேசியா ஏர்லைன்ஸ் MH370 விமானம் 2014 மார்ச் 8 அன்று கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் சென்றுகொண்டிருந்தபோது காணாமல் போனது.
இதையடுத்து விமானத்தை தேடும் பணியில் மலேசியா, அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டன, கிட்டத்தட்ட இந்தியப் பெருங்கடலின் 120,000 சதுர கிலோ மீட்டர் (46,332 சதுர மைல்) பரப்பளவை தேடுதல் பணி நிறைவு செய்து இருந்தது.
ஆனால் குறிப்பிடத்தக்க விமானத்தின் சிதைவு பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
விமானத்தின் பாகங்கள் என்று நம்பப்படும் சில சிதைவுகள் மட்டும் ஆப்பிரிக்காவின் கடற்கரைகளிலும் இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகளிலும் கரை ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.
இறுதியில் பலனளிக்காத இந்த தேடல் வேட்டையானது 2018ம் ஆண்டு நிறைவுக்கு வந்தது.
இருப்பினும், காணாமல் போன விமானத்தில் இருந்த 150க்கும் மேற்பட்ட சீனர்களின் குடும்பத்தினர், தொடர்ந்து புதிய தேடுதல் முயற்சிகளை மேற்கொள்ளவும் மலேசியா ஏர்லைன்ஸ் மற்றும் பிற தரப்பினரிடமிருந்து இழப்பீடு கோரியும் வருகின்றனர்.
ஆரம்பத்தில் விமானம் வேண்டுமென்றே அதன் பாதையில் இருந்து திசை திருப்பப்பட்டிருக்கலாம் என்ற சாத்தியத்தை மலேசிய புலனாய்வாளர்கள் நிராகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் போயிங் 777 விமானத்தின் இந்த மறைவு, விமானப் போக்குவரத்தின் மிகப்பெரிய மர்மங்களில் ஒன்றாக மாறியுள்ளது.