நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது கல் வீச்சு.., பொலிஸார் வழக்குப்பதிவு
நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல் வீசப்பட்டது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அல்லு அர்ஜுன் வீடு
நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா 2 திரைப்படம் கடந்த 5-ம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூலை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தின் சிறப்பு காட்சி டிசம்பர் 4 -ம் திகதி இரவு ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் வெளியான போது மக்கள் கூட்டம் அலைமோதியது.
அங்கு, அல்லு அர்ஜுனை பார்ப்பதற்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில், 35 வயதுடைய பெண் ஒருவர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தார். அவரது மகன் மூளைச்சாவடைந்திருக்கிறார்.
இந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைதாகி ஜாமினில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தில் இருக்கும் நடிகர் அல்லு அர்ஜுனின் வீடு கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (OU JAC) எனக் கூறிக்கொள்ளும் மாணவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் பேசுகையில், “இறந்த ரேவதியின் குடும்பத்தை நடிகர் அல்லு அர்ஜுன் கவனித்துக் கொள்ள வேண்டும்.
தண்டனை விதிக்கப்பட்ட ஒரு நடிகரை திரையுலக பிரபலங்கள் பார்த்து ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால், ரசிகையின் இறப்பிற்கு யாரும் கவலைப்படவில்லை” என்றார்.
இந்த சம்பவம் குறித்து அல்லு அர்ஜுனின் தந்தை செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களுடைய வீட்டிற்கு என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். இதற்கு எதிர்வினையாற்ற சரியான நேரம் இது அல்ல.
இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எங்களைப் பாதுகாக்க காவல்துறை தயாராக இருக்கிறது. இதனை யாரும் ஊக்குவிக்க வேண்டாம். சட்டம் தனது கடமையை செய்யட்டும்” என்றார்.