முதியோர் நாடாக மாறும் ஒரு கிழக்காசிய நாடு.., அதிகாரப்பூர்வ தகவல்
தென் கொரியா நாடானது முதியோர் நாடாக மாறுகிறது என்றும், மக்கள் தொகையில் 20 சதவீதம் பேர் 65 வயதை கடந்தவர்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
முதியோர் நாடு
கிழக்காசிய நாடுகளில் ஒன்றான தென் கொரியாவில் பவுத்த, கிறித்தவ மக்கள் வசிக்கின்றனர். இங்கு மொத்தம் 5.17 கோடி மக்கள் வசிக்கின்றனர்.
இந்நிலையில், தென் கொரியா நாடானது அதிக எண்ணிக்கையில் முதியோர் வசிக்கும் நாடாக மாறி வருகிறது. மேலும், அங்குள்ள மக்கட்தொகையில் 20 சதவீதம் பேர் 65 வயதை கடந்தவர்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இது குறித்து உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தென் கொரியாவில் 65 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மக்களின் எண்ணிக்கை 10.24 மில்லியனாக உள்ளது.
இது நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 20 சதவீதமாக உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு 0.72 சதவீதமாக பிறப்பு விகிதம் சரிந்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையானது 65 அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 7 சதவீதத்திற்கு மேல் உள்ள நாடுகளை வயதான சமுதாயம் (aging societies) எனவும், 14 சதவீதத்திற்கு மேல் உள்ளவர்களை முதியோர் சமுதாயம் (Aged society) எனவும், 20 சதவீதத்திற்கு மேல் உள்ளவர்களை சூப்பர் ஏஜ் (super-aged society) எனவும் வகைப்படுத்துகிறது.
உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, தென்கொரியாவில் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகம். மொத்த மக்கள்தொகையில், 17.83 சதவீத ஆண்கள் மற்றும் 22.15 சதவீத பெண்கள் மூத்த குடிமக்கள் உள்ளனர்.