காஸாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐநா தகவல்
காஸாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக ஐ.நா அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது.
ஐ.நா தகவல்
காசா பகுதியில் ஒவ்வொரு மணி நேரமும் ஒரு குழந்தை பலியாகிறது என்று பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம் (UNRWA) தெரிவித்துள்ளது.
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் இன்னும் முடிவடையவில்லை. இந்த நிலைமை குறித்து உலக நாடுகளை கவலை தெரிவித்துள்ளன. இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45,338ஆக உயர்ந்துள்ளதாக பாலஸ்தீனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஸாவில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுகின்றனர். குழந்தைகளைக் கொல்வதை நியாயப்படுத்த முடியாது.
உயிர் பிழைப்பவர்கள் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். காஸாவில் உள்ள சிறுவர்களும் சிறுமிகளும் கல்வி இல்லாமல் பிரச்சனையை சந்திக்கின்றனர்.
குழந்தைகள் தங்குவதற்கு இடமில்லாமல் தவித்து வருகின்றனர். அவர்கள் தங்கள் வாழ்க்கையையும், எதிர்காலத்தையும், நம்பிக்கையையும் இழக்கிறார்கள். இதுவரை 14,500 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு “பிணைக்கைதிகளை நாங்கள் கைவிடமாட்டோம். மீட்கும் வரை போரை நிறுத்த மாட்டோம். பிணைக்கைதிகளை மீட்கும் முயற்சியில் சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.