;
Athirady Tamil News

சர்வதேச நீரில் மூழ்கிய ரஷ்ய சரக்கு கப்பல்: “தீவிரவாத தாக்குதல்” என உரிமையாளர் குற்றச்சாட்டு

0

ரஷ்ய சரக்கு கப்பல் தீவிரவாத தாக்குதல் காரணமாக மத்திய தரைக்கடல் பகுதியில் நீரில் மூழ்கடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடலில் மூழ்கிய ரஷ்ய சரக்கு கப்பல்
ரஷ்ய சரக்கு கப்பலான உர்சா மேஜர்(Ursa Major) என்ற சரக்கு கப்பல் ஸ்பெயின் மற்றும் அல்ஜீரியா இடையேயான சர்வதேச நீரில் பழுதடைந்து கடலில் மூழ்கியதாக செய்திகள் வீடியோ ஆதாரங்களுடன் வெளிவந்தன.

கப்பலில் இருந்த 14 குழு உறுப்பினர்கள் மீட்கப்பட்ட நிலையில், இரண்டு பேரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டது.

என்ஜின் அறையில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக இந்த பயங்கர சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆரம்பகட்ட தகவல்களில் என்ஜின் அறையில் வெடிப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

இந்த சரக்கு கப்பலானது ரஷ்ய பாதுகாப்பு நிறுவனமான ஒபோரோன்லோஜிஸ்டிகாவுக்கு(Oboronlogistika) சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தாக்குதல்
இந்நிலையில், ரஷ்ய சரக்கு கப்பலான “உர்சா மேஜர்” மூழ்கியதற்கு “தீவிரவாத தாக்குதல்” தான் காரணம் என அதன் உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

கப்பலின் உரிமையாளரான “ஒபோரான்லோஜிஸ்டிகா”, இந்த சம்பவம் திட்டமிட்ட தாக்குதல் என்று குற்றம் சாட்டியுள்ளதாக ரஷ்ய அரசு ஊடகம் RIA செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைனின் இராணுவ உளவுத்துறை, முன்னதாக Sparta III என்று அழைக்கப்பட்ட உர்சா மேஜர் கப்பல் சிரியாவில் அசாத்தின் ஆட்சி வீழ்த்தப்பட்டதை அடுத்து, அங்குள்ள ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை மீட்க சிரியாவுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.