;
Athirady Tamil News

ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்த இந்தியரின் உடல் 6 மாதங்களுக்கு பின்பு சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது

0

ரஷ்யா-உக்ரைன் போரில் உயிரிழந்த இந்தியரின் உடல் 6 மாதங்களுக்கு பின்பு சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

உத்தர பிரதேச மாநிலம் ஆசம்கர் மாவட்டம் பங்கதா கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையா யாதவ் (41). மனைவி 2 மகன்கள் உள்ளனர். ஒரு முகவர் மூலம் வேலை விசா பெற்றுக் கொண்டு ஜனவரி 16-ம் தேதி ரஷ்யாவுக்கு சென்றுள்ளார் கண்ணையா. செயின்ட் பீட்டர்ஸ் ஸ்கொயர் பகுதிக்கு சென்ற அவருக்கு சமையலர் வேலை தருவதாகக் கூறி பயிற்சி கொடுத்துள்ளனர். அதன் பிறகு ரஷ்ய ராணுவத்தில் சேர்த்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து உக்ரைனுடனான போரில் முதல்நிலை வீரராக இவரை ஈடுபடுத்தி உள்ளனர். இதில் படுகாயமடைந்த கண்ணையா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சில நாட்களுக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி கண்ணையா உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்து 6 மாதங்களான நிலையில், கடந்த திங்கள்கிழமை அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது. அன்று மாலை இறுதி அஞ்சலிக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டது.

இதுகுறித்து கண்ணையாவின் மனைவி கீதா கூறும்போது, “ரஷ்ய ராணுவத்தின் சார்பில் உக்ரைன் போரில் ஈடுபட்டபோது காயமடைந்ததாக, என் கணவர் கடந்த மே 9-ம் தேதி எங்களுக்கு தகவல் கொடுத்தார். மே 25-ம் தேதி வரை எங்களுடன் தொடர்பில் இருந்தார். அதன் பிறகு அவர் எங்களுடன் பேசவில்லை.

6 மாதங்கள் கடந்த நிலையில் கடந்த டிசம்பர் 6-ம் தேதி மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எங்களை தொடர்புகொண்டு பேசினர். அப்போது என் கணவர் கடந்த ஜூன் 17-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார் என தெரிவித்தனர். அதன் பிறகு அவரது உடல் ஒருவழியாக எங்களிடம் ஒப்படைக்கப்பட்டது” என்றார்.

கண்ணையாவின் மகன் அஜய் கூறும்போது, “என் தந்தை மரணம் அடைந்ததற்காக எங்களுக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு தருவதாக ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. இன்னும் அந்தத் தொகை எங்களுக்கு கிடைக்கவில்லை” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.