;
Athirady Tamil News

கிளிநொச்சி மாவட்டத்தில் நவீன தொழில்நுட்ப பங்களிப்புடன் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

0

விவசாயிகளின் பொருட்களின் உற்பத்தித் தரத்தை மேம்படுத்துவதுடன் அவர்களுக்கான சந்தை வாய்ப்பை தொடர்ச்சியாகப் பெற்றுக்கொடுப்பதன் ஊடாக பெருமளவான விவசாயிகளை ஊக்கப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நவீன தொழில்நுட்ப பங்களிப்புடன் விவசாய நடவடிக்கைகளை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தலைமையில் கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை (26.12.2024) இடம்பெற்றது.

விவசாயம் தொழில்முறை சார்ந்ததாக மாற்றப்பட வேண்டும் என்பதுடன் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என ஆரம்ப உரையில் குறிப்பிட்ட மாவட்டச் செயலர் சு.முரளிதரன், விவசாயிகள் நெல்லுடன் பணப் பயிர்களையும் செய்யவேண்டும் எனக் கோரினார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஆளுநர்,

முன்னைய காலங்களில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதை நினைவுகூர்ந்ததுடன் தற்போது அவை அருகிச் செல்வதாகவும் குறிப்பிட்டார். மேலும் விவசாயத்துடன் தொடர்புடைய அலுவலர்கள் களத்துக்குச் சென்று விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
சியாப் திட்டத்தின் கீழ் எமது மாகாணத்துக்கு அடுத்த ஆண்டு 100 கோடி ரூபா நிதி கிடைக்கவுள்ள நிலையில் அதை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும் எனத் தெரிவித்த ஆளுநர், எந்தவொரு காரணத்துக்காகவும் அந்த நிதி செலவழித்து முடிக்கப்படாமல் இருக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.

விவசாய மற்றும் நீர்பாசனத் துறையுடன் தொடர்புடைய திணைக்களத்தலைவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக்கூறினர். அதற்குரிய தீர்வுகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

குறிப்பாக ஏ.எஸ்.எம்.பி. திட்டத்தின் கீழ் 4 பயிர்களின் செய்கை (மிளகாய், கச்சான், பஷன் புருட், மாதுளை) ஏற்றுமதி நோக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் முன்னேற்றம் மற்றும் சவால்கள் தொடர்பிலும் எதிர்காலத்தில் எவ்வாறு வினைத்திறனான கொண்டு செல்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
அதிகளவான விவசாயிகள் எதிர்காலத்தில் இந்தப் பயிர்ச்செய்கையில் ஈடுபடவேண்டுமாயின் சந்தை வாய்ப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார்.

வடக்கில் 17 கமக்கார நிறுவனங்கள் (Farmer company) இந்தப் பயிர்ச்செய்கைக்காக உருவாக்கப்பட்டுள்ளன என்றும் அதன் ஊடாக இதைத் தொடர்ந்து சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதி செய்தல் என்பன முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

நீர் முகாமைத்துவத்துக்கான நியதிச் சட்டங்கள் – கட்டமைப்புக்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு விவசாய அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டதுடன், இதன் காரணமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அவர்கள் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர்.
விவாயத்துறை மேம்பாடு மற்றும் நவீனமயப்படுத்தலுக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்ப்பதற்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.