இறக்குமதி அரிசி தொகை விடுவிப்பு மீண்டும் ஆரம்பம்
நிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி அரிசி தொகை விடுவிப்பு இன்று (26) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்த வர்த்தகர்கள் இன்று காலை முதல் அரிசியை விடுவித்துக் கொள்ள முடியும் என சுங்க ஊடகப் பேச்சாளர் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் அரிசி பிரச்சினைக்கு தீர்வாக கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் தனியார் துறை வர்த்தகர்களுக்கு நேரடியாக அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டதோடு அக்காலப்பகுதியில் 67,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எவ்வாறாயினும், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவையில் அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
இதன்படி, இன்று முதல் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் அரிசி மீண்டும் விடுவிக்கப்படும் என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அரச வர்த்தக பல்நோக்கு கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 780 மெற்றிக் தொன் அரிசியின் முதலாவது தொகுதி நேற்று (25) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையவிருந்ததாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார்.
அந்த அரிசி தொகை உடனடியாக சந்தைக்கு விடுவிக்கப்படும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.