;
Athirady Tamil News

ஆச்சரியமூட்டும் கல்வி தகுதி, உயர் பதவிகள், அரசியல் வாழ்க்கை: மன்மோகன் சிங்கின் கடந்து வந்த பாதைகள்!

0

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது கல்வி தகுதி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

மன்மோகன் சிங்கின் வியக்க வைக்கும் கல்வி தகுதி
பல்வேறு வெளிநாடுகளில் உள்ள சிறந்த கல்வி நிலையங்களில் பல பட்டங்களை பெற்றுள்ள மன்மோகன் சிங், இந்திய அரசின் பல்வேறு உயரிய பதவிகளிலும் பங்காற்றியுள்ளார்.

செப்டம்பர் 26ம் திகதி பஞ்சாப்பில் இந்தியாவின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் பிறந்தார்.

பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் 1952 மற்றும் 1954-ஆம் ஆண்டுகளில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றார் மன்மோகன் சிங்.

இதையடுத்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார டிரிபோஸ் பட்டத்தை 1957ம் ஆண்டு பெற்றார்.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 1962ம் ஆண்டு பொருளாதாரத்தில் டி.பில் பட்டம் பெற்றார்.

உலக தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற பிறகு மன்மோகன் சிங் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக தனது பணியை தொடங்கினார்.

பின், உலக புகழ்பெற்ற கல்வி நிறுவனமான டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிஸில் பேராசிரியராக பணியாற்றினார்.

இந்திய அரசின் உயர் பதவிகளில்…
மன்மோகன் சிங்கின் பொருளாதார அறிவை அறிந்து கொண்ட இந்திய அரசு அவரை 1971-ஆம் ஆண்டு வர்த்தக அமைச்சகத்தின் பொருளாதார ஆலோசகராக நியமித்தது.

இதனை தொடர்ந்து மத்திய நிதி அமைச்சகத்தில் 1972-ஆம் ஆண்டு தலைமை பொருளாதார ஆலோசகராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

பின், 1987 முதல் 1990 வரை ஜெனீவாவில் தெற்கு ஆணையத்தின் பொது செயலாளர், மத்திய நிதி அமைச்சகத்தின் செயலாளர், திட்டக்குழுவின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர், யுஜிசி தலைவர், பிரதமரின் ஆலோசகர் என பல்வேறு இந்திய அரசின் முக்கிய பதவிகளில் மன்மோகன் சிங் சேவையாற்றியுள்ளார்.

அரசியல் வாழ்க்கை
அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்த மன்மோகன் சிங், 1991ம் ஆண்டு முதல் முறையாக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிறகு 1998 முதல் 2004ம் ஆண்டு வரை எதிர்க்கட்சித் தலைவராகவும் மன்மோகன் சிங் செயல்பட்டார்.

2004 மற்றும் 2009 ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு மெகா வெற்றி கிடைத்தது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்த மெகா வெற்றியின் சார்பாக கடந்த 22 மே 2004 மற்றும் 22 மே 2009 திகதிகளில் இந்தியாவின் பிரதமராக இரண்டு முறை பதவியேற்றுக் கொண்டார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவரது மனைவி குர்ஷரன் கவுருக்கு 3 மகள்கள் உள்ளனர்.

தன்னுடைய பணிவு மற்றும் பொருளாதார அறிவு ஆகியவற்றுடன் சேர்த்து இந்தியாவின் நேர்மையான அரசியல்வாதியாகவும் மன்மோகன் சிங் கருதப்படுகிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.