கனடா வழியாக அமெரிக்காவுக்கு கடத்தப்படும் மாணவர்கள்: விசாரணையைத் துவக்கும் இந்தியா
கனடா அமெரிக்க எல்லை வழியாக சர்வதேச மாணவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.
கனடா அமெரிக்க எல்லை வழியாக கடத்தப்படும் மாணவர்கள்
கனடா அமெரிக்க எல்லை வழியாக சர்வதேச மாணவர்கள் கடத்தப்படும் விடயத்தில், கனடாவிலுள்ள பல கல்லூரிகளுக்கும் இந்தியாவின் மும்பை நகரத்திலுள்ள இரண்டு அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
பல்வேறு நகரங்களில் தாங்கள் மேற்கொண்ட தேடலில், ஆட்கடத்தலுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதாக இந்திய அமலாக்க இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, கனடா அமெரிக்க எல்லையை நடந்தே கடந்து அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி வைஷாலி (37) மகள் விஹாங்கி (13) மற்றும் மகன் தார்மிக் (3) ஆகியோர் சடலங்களாக கிடந்த காட்சிகள் பல நாடுகளில் அதிர்ச்சியை உருவாக்கின.
இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்தே இந்திய அமலாக்க இயக்குநரகம் இந்த ஆட்கடத்தல் விவகாரம் தொடர்பாக விசாரணையைத் துவக்கியுள்ளது.
அத்துடன், கடந்த மாதம், ப்ளோரிடாவைச் சேர்ந்த ஸ்டீவ் ஷாண்ட் மற்றும் இந்தியக் குடிமகனான ஹர்ஷ்குமார் பட்டேல் என்னும் இருவர், அதிகாரப்பூர்வமற்ற வகையில் மக்களை கனடா அமெரிக்க எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் கொண்டுவருவதாக சிகாகோவில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.