பாகிஸ்தான் நடத்திய வான் தாக்குதல்: பதிலடி கொடுத்த ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தான் நடத்திய விமான தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் பதிலடி கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் தாக்குதல்
கடந்த செவ்வாய்க்கிழமை, ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியான பக்திகா மாகாணத்தில் உள்ள பயிற்சி முகாமை அழித்து, கிளர்ச்சியாளர்களை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டு பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் ஆப்கானிஸ்தான் இந்த பதிலடியை கொடுத்துள்ளது.
பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதல்களில் ஏராளமான பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
சில தினங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நடத்திய விமானத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு இருப்பதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்துள்ளது.
அதில், தனது ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் பல இடங்களை தாக்கியதாக தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் பதிலடி
தலிபான் பாதுகாப்பு அமைச்சகம், எக்ஸ் இணையதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், தாங்கள் பதிலடி தாக்குதல்களை நடத்தியதை உறுதிப்படுத்தியது.
அத்துடன் ஆப்கானிஸ்தானுக்குள் தாக்குதல்களை ஒருங்கிணைக்கும் தீய சக்திகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கான “மையங்கள் மற்றும் மறைவிடங்களாக” பாகிஸ்தானில் உள்ள இடங்களை தாக்கியதாக தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது தாக்குதல்கள் எவ்வாறு நடத்தப்பட்டன என்பது குறித்த விவரங்களை அமைச்சகம் வெளியிடவில்லை.
பாகிஸ்தான் அதிகாரிகள், எல்லை தாண்டிய தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்க தலிபான் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் இது தொடர்பாக எந்தவொரு பதிலும் வழங்கவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.