முக்தி அடைய போவதாக கூறி 4 பேர் தற்கொலை – கிரிவலபாதையில் நடந்த சோகம்
முக்தி பெறப்போவதாக கூறி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கோவில்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமில்லாது, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
குறிப்பாக கார்த்திகை தீபம், பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் வருகை தந்து, கிரிவலப்பாதையில் கிரிவலம் மேற்கொள்வார்கள்.
4 பேர் தற்கொலை
இந்நிலையில் சென்னை வியாசர்பாடி சேர்ந்த மகா காலவியாசர்(45), அவரது மனைவி ருக்மணி பாய்(40), மகள் ஜலந்தரி(17), மகன் ஆகாஷ் குமார்(15) ஆகிய 4 பேரும் நேற்று மதியம் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலப்பாதையில் உள்ள டிவைன் பார்ம் ஹவுஸ் விடுதியில் தங்கியுள்ளனர்.
இன்று காலை விடுதி ஊழியர்கள் வெகு நேரமாக கதவை தட்டியும் கதவை திறக்காததால் திருவண்ணாமலை தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனையடுத்து விடுதிக்கு வந்த காவல்துறையினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் நான்கு பேர் இறந்த நிலையில் இருந்துள்ளனர். நான்கு உடல்களையும் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடிதம்
தொடர்ந்து அவர்கள் நடத்திய விசாரணையில், இவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்திற்கு திருவண்ணாமலை வந்து சில நாட்கள் தங்கியிருப்பார்கள் என தெரிய வந்துள்ளது. அதே போல் இந்த ஆண்டும் வந்த தங்கியிருந்த இவர்கள் நேற்று மீண்டும் திருவண்ணாமலைக்கு வருகை தந்துள்ளனர்.
அவர்கள் தங்கியிருந்த அறையில் நடத்திய ஆய்வில், ஒரு கடிதம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில், முக்தி அடையும் நோக்கத்தில் தற்கொலை செய்துள்ளதாகவும், இது அவர்களின் மகன் மற்றும் மகளின் முழு ஒத்துழைப்பில் நடந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அறையில் சயனைடு பாட்டில்கள் இருந்ததால் சயனைடு அருந்தி தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. முக்கிய ஆன்மீக தலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.