;
Athirady Tamil News

மன்மோகன் சிங்கிற்கு அவமரியாதை செய்துள்ளது பாஜக அரசு – முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்

0

மன்மோகன் சிங்கின் பங்களிப்பை பொதுமக்களின் நினைவிலிருந்து அழிக்க திட்டமிட்டு முயற்சி செய்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மன்மோகன் சிங்
கடந்த 2 நாட்களுக்கு முன் மூச்சுத் திணறல் பிரச்சினை காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் அரசு மரியாதைப்படி யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள நிகம்போத் காட் பகுதியில் இன்று(28.12.2024) மன்மோகன் சிங்கின் உடல் அவரது குடும்ப முறைப்படி தகனம் செய்யப்பட்டது.

மு.க.ஸ்டாலின்
அவரது குடும்பத்தினர் இறுதி சடங்கிற்காக தனி இடம் கேட்டதாகவும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய பாஜக அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டாக்டர் மன்மோகன் சிங்கின் நினைவிடத்திற்கு பொருத்தமான இடத்தில் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கான உரிமையை அவரது குடும்பத்தினருக்கு மறுக்கும் பாஜக அரசின் முடிவு, அவரது உயர்ந்த மரபு மற்றும் சீக்கிய சமூகத்தை நேரடியாக அவமதிப்பதாகும்.

இழிவுபடுத்திய கறை
குடும்பத்தின் கோரிக்கையை நிராகரித்து, 2 முறை பிரதமராக இருந்தவரை நிகம்போத் காட் பகுதிக்கு அனுப்பியது, ஆணவம், பாரபட்சம். மேலும், அவரது மகத்தான பங்களிப்பை பொதுமக்களின் நினைவிலிருந்து அழிக்க திட்டமிட்டு முயற்சி செய்துள்ளனர்.

டாக்டர் மன்மோகன் சிங்கின் தலைமை இந்தியாவின் பொருளாதாரத்தை மாற்றியது. மேலும், மில்லியன் கணக்கானவர்களை வறுமையிலிருந்து மீட்டது. அவரை அவமரியாதை செய்வது இந்தியாவின் முன்னேற்றத்தையே அவமதிப்பதாகும். தலைசிறந்த தலைவர்களை இழிவுபடுத்திய கறை வரலாற்றில் இருந்து மறையாது” என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.