;
Athirady Tamil News

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் புலமைப் பரிசில்கள் பகிர்தல்

0

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில் தொழில் பணிபுரியும், பணிபுரிந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள் பகிர்தல் நிகழ்வானது மாகாண சிரேஷ்ட முகாமையாளர் திருமதி எல். லக்சாயினி தலைமையில் நேற்றைய தினம் (28.12.2024) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையில்,
வெளிநாட்டில் தொழில்புரிபவர்களால் நாட்டிற்கு அந்நியச் செலாவணி கிடைத்துவருவதாகவும், பதிவு செய்து வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்வதற்கான விழிப்புணர்வுகள் அதிகம் தேவை எனவும் குறிப்பிட்டதுடன், தந்தை அல்லது தாய் தொழில் நிமித்தம் காரணமாக வெளிநாடு சென்ற நிலையில் அவர்களின் பிள்ளைகள் தமது கல்வியில் ஆர்வம் காட்டி கற்று நல்ல தேர்ச்சி பெற்றமையிட்டு பிள்ளைகளையும் அவர்களின் பெற்றோர்களையும் பாராட்டுவதாகத் தெரிவித்தார்.

மேலும், இவ் போட்டி நிறைந்த கல்விச் சூழலில் விடாமுயற்சியாக கற்று உயர்வு அடைய வேண்டும் என மாணவர்களை கேட்டுக்கொண்டதுடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படும் கல்விக்கான உதவியானது ஒரு ஊக்கப்படுத்தலாகும் எனவும், அந்த வகையில் தரம் 05 புலமைப்பரிசில் (25,000/=) பரீட்சை, க.பொ. த (சாதாரண தரம் 30,000/=) மற்றும் க. பொ. த (உயர்தரம் பரீட்சை 35,000/=) ஆகியவற்றில் அதி உயர் சித்தியடைந்த 26 மாணவர்களுக்கான ஊக்குவிப்புக்கொடுப்பனவு மற்றும் 98 மாணவர்களுக்கான ரூபா 10,000/= பெறுமதியான பாடசாலை உபகரணங்கள் வழங்கல் என்பன மாணவர்களின் அடைவு மட்டத்தினை அதிகரிக்க துணை நிற்கும் எனவும், மேலதிக தேவைப்பாடுகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள் என்றும் மாணவர்களுக்கு துணை நிற்கும் எனக் குறிப்பிட்டு மாணவர்களின் எதிர்கால ஒளிமயமான வாழ்க்கைக்கு தமது வாழ்த்துக்களையும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்திற்கான பொறுப்பதிகாரி ரி. கோடீஸ்வரன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் தி. பிராங்கிளின், பணியகத்தின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.