சிறப்புற நடைபெற்ற யாழ்ப்பாணம் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா – 2024
யாழ்ப்பாணம் மாவட்ட பண்பாட்டுப் பெருவிழா மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட பண்பாட்டுப் பேரவைத் தலைவருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் அரியாலை மகாமாரியம்மன் மண்டபத்தில் 27.12.2024 வெள்ளிக்கிழமை சிறப்புற நடைபெற்றது.
இந் நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு எம்மிடம் உள்ளது எனவும், இன்றைய கலாசார பவனியில் தமிழர்களின் அரிய கலாசாரம் வெளிக்கொணரப்பட்டதாகவும், இதனை எமது இளஞ் சமூகம் அறிந்து பேணுவதற்கான வாய்ப்பாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், தமிழர்கள் தம் பண்பாட்டில் மூத்தவர்களுக்கு மதிப்பளித்தல், கனம் பண்ணுதலுக்கு மிக முக்கியத்துவம் வழங்குவதால், நாமும் எமது மாவட்டத்திற்கு அளப்பரிய சேவையாற்றிய மூத்த நிர்வாக சேவை அதிகாரியும், சிறந்த ஆளுமைமிக்கவருமான அரியாலை மண்ணின் மைந்தன் முன்னாள் அரசாங்க அதிபர் உயர்திரு. செல்லையா பத்மநாதன் அவர்களை பிரதம விருந்தினராகவும், ஏனைய ஓய்வு பெற்றவர்களையும் எமது பண்பாட்டிற்கு அமையவே விருந்தினர்களாக அழைத்து கனம் பண்ணுவதாகவும் தெரிவித்தார். மேலும், எமது மூத்த கலைஞர்கள் மற்றும் இளங்கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவிப்பதும் எமது பண்பாட்டிற்கு அமைவானதே எனத் தெரிவித்து, கல்வியோடு இணைந்த வகையில் எமது கலைப் பொக்கிசத்தினை முன்னோக்கி எடுத்துச் செல்ல அனைவரும் திடசங்கற்பம் பூண வேண்டும் என விழாவிற்கு வருகை தந்தவர்களை அரசாங்க அதிபர் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட ஓய்வு நிலை அரசாங்க அதிபர் செல்லையா பத்மநாதன் , சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பண்பாட்டு அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி லாகினி நிரூபராஷ், மற்றும் ஓய்வுநிலை அழகியல் உதவிப் பணிப்பாளரும் பன்னாட்டு ஆடற்கலை ஆற்றுகையாளருமான கலைஞர் வேல் ஆனந்தன், கௌரவ விருந்தினர்களாக யாழ் மாவட்ட ஓய்வுநிலை பிரதம கணக்காளர் சுப்பையா சண்முகரத்தினம், மற்றும் நல்லூர் பிரதேச செயலக ஓய்வு நிலை கலாசார உத்தியோகத்தர் திருவாட்டி ரஜினி குமாரசிங்கம் கலந்து சிறப்பித்தார்கள்.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட முன்னாள் அரசாங்க அதிபர் செல்லையா பத்மநாதன் அவர்கள் தமதுரையில், ஒரு சமூகம் தமது கலாசார பண்பாட்டு விழுமியங்களை அழியாமல் பாதுகாத்தல் கூட அபிவிருத்தியாகும் எனக் குறிப்பிட்டு, இஸ்ரேல் தேசமானது பல இழப்பிற்கும் மத்தியிலும் தமது மொழி மற்றும் மதக் கோட்பாட்டை இற்றைவரை பேணிவருவதனால் இன்று முன்னோடி நாடாகவே உள்ளது எனவும் ஆனால் கம்போடியாவில் அத் தேசத்தின் ஆவணச்சாலைகள் அழிக்கப்பட்டு இழப்புக்களை சந்தித்தமையால் அத் தேசம் மொழி கலாசாரம் அழிக்கப்பட்ட இனமாகவுள்ளதாகவும் குறிப்பிட்டு, கலாசார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாத்து அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்வதும் அபிவிருத்தியின் ஒரு அங்கமாகும் எனக் குறிப்பிட்டார். மேலும், எமது அரியாலை மண்ணில் நூற்றாண்டு கடந்த நிலையில் சுதேசிய விழா கொண்டாடப்பட்டு – எமது கலாசாரம் அழியாவண்ணம் பாதுகாக்கப்படுவதாகவும், அரியாலை மண்ணின் 106 வதுஆண்டு சுதேசிய விழாவிலும் அனைவரும் பங்குபற்றி மக்களின் அபிவிருத்தி வளர்ச்சி மற்றும் மக்களின் மகிழ்ச்சியிலும் பங்கெடுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இந் நிகழ்வு ஆரம்பமாகவதற்கு முன்னர் அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்திலிருந்து விருந்தினர்கள் கலாசார முறைப்படி மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டதுடன், இனியம், கோலாட்டம், சிலம்பாட்டம், குதிரையாட்டம் உள்ளடங்கலான கலாசார ஊர்வல பவனியும் சிறப்பாக இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து நெல்லியடி சிவா குழுவினர் வழங்கிய மங்கல இசை நிகழ்வும், பருத்தித்துறை ஞானசம்பந்தர் கலாமன்ற மாணவர்களின் வரவேற்பு நடனமும், கொழும்புத்துறை கீதவாஹினி இசைக் கல்லூரி மாணவர்களின் வாத்திய பிருந்தா நிகழ்வும், வேலணை துறையூர் ஐயனார் கலாமன்ற மாணவர்களின் அம்மன் நடன நிகழ்வும் மற்றும் சங்கானை பதஞ்சலிஷேத்திரா நடனாலய மாணவர்களின் புத்தாக்க நடன நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.
மேலும், இந் நிகழ்வில் “யாழ்ப்பாணம் – 3 “நூல் வெளியீட்டு விழா சிறப்புற நடைபெற்றது. நூலின் முதற்பிரதியினைஅரசாங்க அதிபர் வெளியிட பிரதம விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் அரசாங்க அதிபர் செல்லையா பத்மநாதன் அவர்கள் பெற்றுக் கொண்டார். நூலிற்கான நயப்புரை வழங்கிய கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர் செந்தமிழ்ச் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் , இந் நூலானது வரலாற்றுப் பொக்கிஷம் எனவும், எதிர்கால சந்ததிக்கு கையளிக்கும் மேன்மையுடைய நூலாகும் என “யாழ்ப்பாணம் – 03” நூலுக்கு பெருமை சேர்த்தார்.
மேலும் “யாழ் முத்து” விருது 15 கலைஞர்களுக்கும், இளங்கலைஞர் விருது 15 கலைஞர்களுக்கும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு பெரு விழாவானது வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரனையுடனும், யாழ் மாவட்ட பண்பாட்டுப் பேரவையும் மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந் நிகழ்வில் பெருந்திரளாக கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொது மக்கள், பிரதேச செயலாளர்கள் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து விழாவினைச் சிறப்பித்தனர்.