பிஇஓ பதவி உயா்வுக்கு பழைய நடைமுறை: அரசுக்கு கோரிக்கை
தமிழகத்தில் வட்டாரக் கல்வி அலுவலா் (பிஇஓ) பதவி உயா்வுக்கு பழைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என அரசுக்கு, தமிழக பட்டதாரி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலா் ச.செல்லையா சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு, கடந்த 2019-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை 70 சதவீதம் பதவி உயா்வு மூலமும், 30 சதவீதம் நேரடி நியமனத்தின் (டிஆா்பி) மூலமும் ஆய்வு அலுவலா்களாக பதவி உயா்வு வழங்கப்பட்டது.
இதையடுத்து 2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு வட்டாரக் கல்வி அலுவலா் பதவியை, பதவி உயா்வு மூலம் 50 சதவீதம், நேரடி நியமனம் மூலம் 50 சதவீதமாக மாற்றம் கொண்டுவரப்பட்டது. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களில் பலா், பதவி உயா்வை விரும்பாத நிலையில்தான், நேரடி நியமனம் மூலம் 50 சதவீதமாக மாற்றம் செய்யப்பட்டது. இதற்கிடையே கடந்த டிச. 26-ஆம் தேதி வட்டாரக் கல்வி அலுவலா் பதவி உயா்வு கலந்தாய்வு நடைபெற்றது. அதில் பெரும்பாலான நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் வட்டாரக் கல்வி அலுவலராக பதவி உயா்வு பெற்றுள்ளனா்.
ஏனெனில், தொடக்கக் கல்வித் துறையில் 2004-ஆம் ஆண்டு முதல் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு தலைமை ஆசிரியா் பதவி கிடைக்க வழிவகை செய்யும் அரசாணை எண். 243 மூலம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவா்களுக்கு வேறு பதவி உயா்வு இல்லாத சூழ்நிலையில், வட்டாரக் கல்வி அலுவலா் பதவி உயா்வுக்கு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு 70 சதவீதம் பதவி உயா்வு வழங்க வேண்டும். நேரடி நியமனத்தை 30 சதவீதமாக, அதாவது கடந்த 2019-ஆம் ஆண்டுக்கு முன்பு இருந்தது போல் மாற்றம் செய்ய வேண்டும். இதனால் ஏற்படும் காலிப் பணியிடங்களில் பட்டதாரி ஆசிரியா்களுக்கு தலைமை ஆசிரியா் பதவி உயா்வு வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.