யாழில் வங்கி ஒன்றின் முன்னாள் முகாமையாளர் அதிரடி கைது! வெளியான பரபரப்பு பின்னணி
யாழில் வங்கியில் வேலை பெற்று தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை வங்கி ஒன்றின் முன்னாள் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனுக்கு, தான் கடமையாற்றிய வங்கியில் வேலை வாய்ப்பினை பெற்று தருவதாக கூறி 15 இலட்ச ரூபா பணத்தினை சந்தேக நபர் பெற்றுள்ளார்.
பணத்தினை பெற்று நீண்ட காலமாகியும் வேலை வாய்ப்பினை பெற்று கொடுக்காததால், இளைஞன் பணத்தினை மீள தறுமாறு வங்கி முகாமையாளரிடம் கோரியுள்ளார்.
எனினும், முன்னாள் முகாமையாளர் 15 இலட்ச ரூபா பணத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார்.
காசோலையை இளைஞன் வங்கியில் வைப்பிலிட்ட போது, காசோலை திரும்பியுள்ளது.
இதையடுத்து இளைஞன் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவிடம் முறையிட்டுள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில், முன்னாள் முகாமையாளர் தலைமறைவாகி இருந்தார்.
இந்த நிலையில் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் நேற்று (28-12-2024) அவரை கைது செய்து, பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.