ம.பி.: 140-அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில், 140-அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
குணா மாவட்டத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பிப்லியா கிராமத்தில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. திறந்த நிலையில் கிடந்த சுமாா் 140-அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன், 39 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டாா்.
நீண்ட நேரம் சிறுவனைக் காணாததால் சிறுவனின் குடும்பத்தினா் பீதியடைந்தனா். இதையடுத்து, ஆழ்துளை கிணற்றில் அவா் விழுந்தது தெரியவந்தது.
தகவலறிந்த காவல்துறையினா் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா். உதவிக்காக தேசிய பாதுகாப்பு மீட்புப் படையினா் சனிக்கிழமை இரவு வரவழைக்கப்பட்டனா். சுமாா் 16 மணி நேர போராட்டத்துக்குப் பின்னா் மயக்கமடைந்த நிலையில் சிறுவன் மீட்கப்பட்டாா். உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.