புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பமாகும் நாகை- யாழ் கப்பல்சேவை
நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன் துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.
தமிழகத்திற்கும், இலங்கைக்கும் இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை நாற்பது ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது.
ஆறு நாட்கள் சேவை
மோசமான வானிலை காரணமாக அந்த சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டது. பிறகு மீண்டும் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இந்த சேவை நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நிறுத்தம் செய்யப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தமிழக மற்றும் இலங்கை இடையேயான கப்பல் போக்குவரத்து சேவை 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாம் திகதி முதல் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் இதற்கான முன்பதிவு நத்தார் தினமான டிசம்பர் 25 ஆம் திகதி முதல் தொடங்கியிருக்கிறது. மேலும் வாரத்திற்கு ஆறு நாட்கள் இந்த சேவை கிடைக்கும் என்றும், ஒரு முறை சென்று வருவதற்கான போக்குவரத்து கட்டணம் இந்திய மதிப்பில் 35 ஆயிரம் ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த முறையேனும் தமிழகம் மற்றும் இலங்கைக்கு இடையேயான கப்பல் சேவை தொடர்ந்து நீடிக்குமா..!? என்ற எண்ணம் பயணிகளிடத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.