தேசிய ரீதியில் சிறந்த கைத்தொழில் முயற்சியாளராக தெரிவு செய்யப்பட்டோருக்கான கெளரவிப்பு நிகழ்வு
தேசிய ரீதியில் சிறந்த கைத்தொழில் முயற்சியாளராகத் தெரிவு செய்யப்பட்டோருக்கான கெளரவிப்பு நிகழ்வானது கைத்தொழில் அபிவிருத்திச் சபையின்
மாகாணப் பணிப்பாளர் சி. சிவகெங்காதரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (30.12.2024) காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையில்,
எமது கல்வி முறைமைக்கும் தொழில் முயற்சிக்கான தயார்படுத்தலுக்கும் இடையிலான இடைவெளி காணப்படுகிறது எனவும், ஆனால் பல சவால்கள் நெருக்கடிகளுக்கும் மத்தியில் தொழில் முயற்சியில் ஈடுபட்டு, பட்டதாரிகளுக்கு கூட வேலைவாய்ப்பு வழங்கும் அளவிற்கு உயர்ந்துள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
மேலும், இன்றைய சமூக மாற்றத்திற்கு ஏற்ப வர்த்தகப் பொருட்களுக்கான பொதியிடலில் முறைமையில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், தேசிய ரீதியிலான தொழில் முயற்சியாளர்களுக்கான போட்டியில் மாவட்ட ரீதியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றவர்கள் தொடர்ந்தும் முன்னேற்றம் அடைய வேண்டும் எனவும், சாதனைப் பயணங்கள் தொடர வேண்டும் எனவும், எமது மாவட்டத்திற்கு முன்மாதிரியாக இருப்பதனையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும், இக் கெளரவிப்பு வழங்கும் நிகழ்வானது தொழில் முனைவோருக்கு ஒரு ஊக்கப்படுத்தலாக அமைகின்றது எனவும், மாவட்டச் செயலகம் மற்றும் கைத்தொழில் அபிவிருத்திச் சபை தொழில் முயற்சியாளர்களின் உயர்ச்சிக்கு என்றும் துணை நிற்கும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
கைத்தொழில் அபிவிருத்தி சபையினால் தேசிய ரீதியாக சிறந்த தொழில் முயற்சியாளர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் நுண்ணிய சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கிடையில் கோரப்பட்டு அவற்றில் யாழ் மாவட்ட ரீதியாக துறைசார்ந்த ரீதியில் வெற்றி பெற்ற 15 தொழில் முயற்சியாளர்களுக்கான சான்றிதழ்களும், மற்றும் தொழில்நுட்ப மாற்றுப் பயிற்சியில் கலந்து கொண்ட 40 பயிற்சியாளர்களுக்கான சான்றிதழ்களும் விருந்தினர்களால் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க. சிறிமோகனன், திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, கைத்தொழில் அபிவிருத்திச் சபை மாவட்டப் பிரதிப்பணிப்பாளர் க. சசிதரன், உத்தியோகத்தர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டார்கள்.